இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டு விழாவுக்கு ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதி சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் பாராட்டு விழா நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை நேரு விளையாட்டரங்கில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இளையராஜாவைப் பாராட்டிப் பேச இருக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில், இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டு விழாவுக்கு ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் சாமிநாதன் தனது எக்ஸ் தளத்தில், “சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று 13.9.2025 அன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினோம். உடன் முதலமைச்சரின் செயலாளர் முனைவர் ம.சு.சண்முகம் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப., ஆகியோர் இருந்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.