கோவில்பட்டி: திரைப்பட வசனம் பேசி இன்ஸ்டாகிராமில் சவால்; இளைஞரை எச்சரித்த போலீஸ்!
Vikatan September 12, 2025 01:48 PM

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மூப்பன்பட்டியை சேர்ந்தவர் முகில் ராஜ். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட  8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட 7  வழக்குகளில் தொடர்புடைய இளஞ்சிறார் ஒருவருக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் தீனா திரைப்படத்தில் சுரேஷ் கோபி பேசும் வசனமான, ”என் தம்பியை குண்டாஸ் சட்டத்தில் போட ஏற்பாடு செய்திருக்காமே .. ஒரு வருஷம் இல்ல.. ஒரு நாள் இல்ல.. உள்ள வச்சு பாரு. 234 தொகுதியில் எந்த தொகுதிக்கு போனாலும் வந்து வெட்டுவேன்” என்ற வசனத்தை பேசி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆயுதங்களுடன் முகில்ராஜ்

இதனையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார், முகில் ராஜை காவல் நிலையத்திற்கு வரவழைத்து எச்சரித்து அனுப்பினர். மேலும் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோவும் போட வைத்துள்ளனர்.  ”நான் இனிமேல் இது போன்று ஆயுதங்களுடனும், திரைப்பட வசனம் பேசியும் யாருக்கும் சவாலோ மிரட்டல்களோ விடுக்க மாட்டேன். என் தவறை உணர்ந்துவிட்டேன். இனிமேல் இது போன்று நடக்க மாட்டேன். தவறுக்காக மன்னிப்பு கோருகிறேன்” எனப் பேசி மன்னிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.