'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்', பை பை, ஸ்டாலின் என்ற கருப்பொருளில் அதிமுக பொது செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 'இடைத்தரகர்கள் அகற்றப்படுவார்கள்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
30 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்த இயக்கமான அதிமுக , தமிழ்நாட்டின் அடிப்படை விழுமியங்களைக் காத்து, "பார்போற்றும் தமிழ்நிலம்" என மெச்சும் நல்லாட்சி தந்தோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2026-இல் அமையவுள்ள அஇஅதிமுக அரசு, இன்றைய விடியா திமுக அரசால் ஏற்பட்ட சரிவுகளை சீர்செய்து, அடுத்த தலைமுறைக்கான வளமிக்க தமிழ்நாட்டை கட்டமைக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
மடத்துக்குளத்தில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டு தாராபுரம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கொண்டரசம்பாளையத்தில் செங்காந்தள் பூக்கள் கொடுத்து விவசாயிகள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். அப்போது பஸ்ஸை நிறுத்திய இபிஎஸ் கீழே இறங்கி அவர்களிடம் பேசினார்.
மேலும், தாராபுரம் கொண்டரசம்பாளையத்தில் செங்காந்தள் பூ விவசாயிகளை அவர் சந்தித்து உரையாற்றினார். அப்போது, விவசாயிகள், செங்காந்தள் பூ , அதிமுக ஆட்சி இருந்தபோது ஒரு கிலோ 3600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், இப்போது 800 ரூபாய்க்குத்தான் போகிறது என்று கூறியுள்ளனர். இதன் போது, இடைத்தரகர்கள் எங்களிடம் ரூ.800 ரூபாய்க்கு வாங்கி, ரூ.4600 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். இதனால், எங்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்து, அரசே விலை நிர்ணயம் செய்துகொடுக்க வேண்டும் என்று கோரிக்கை இபிஎஸ் -யிடம் கோரிக்கை வைத்தனர்.
இதன் பிறகு இபிஎஸ் அவர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சி அமைந்ததும் உங்கள் கோரிக்கை நிறைவேறும் என்றும், அரசிடம் இருக்கும் மார்க்கெட் கமிட்டி மூலம் விதைகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பின், வியாபாரிகள் தடையில்லாமல் வருவார்கள் என்றும், வெளிமாநில வியாபாரிகள் இங்கு வந்து வாங்க முடியாத அளவுக்கு இடைத்தரகர்கள் ஆதிக்கம் இருக்கிறது என்றும், அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த இடையூறுகள் எல்லாம் கலையப்பட்டு, நல்ல விலைக்கு மார்க்கெட் கமிட்டியிலேயே விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.