கன்னட திரைப்பட இயக்குநர் எஸ்.நாராயணன், அவரது மனைவி பாக்யலட்சுமி மற்றும் மகன் பவன் ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளை பெங்களூரு காவல்துறை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து பவித்ரா தனது புகாரில் கூறியுள்ளதாவது: 2021-ல் பவனும், நானும் காதல் திருமணம் செய்து கொண்டோம். அந்த நேரத்தில் பவனுக்கு வேலை இல்லை என்பதால், வீட்டின் செலவுகளை நானே கவனித்து கொண்டேன். மேலும், அவருக்கு ஒரு காரையும் பரிசாக அளித்தேன்.
பின்னர், பவன் ‘கலா சாம்ராட் டீம் அகாடமி’ என்ற பெயரில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்க நிதி கேட்டார். அந்த நிதியை எனது தாயார் வழங்கினார். ஆனால், அந்த நிறுவனம் நஷ்டம் காரணமாக பின்னர் மூடப்பட்டது.
எனது குடும்பத்தினர் திருமண செலவுகளையும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோதிரத்தையும் அளித்தனர். மேலும், பவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் தொழில் தேவைக்காக 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்தோம்.
இவ்வளவு செய்தும், எனது மாமனார் குடும்பத்தினர் மேலும் பணம் கேட்டு என்னை கொடுமைப்படுத்தினர். இதன் காரணமாக, எனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
நான் எனது தாயாருடன் வசித்து வந்தேன். பல முறை என் கணவர் வீட்டுக்குத் திரும்ப முயற்சித்தேன். ஆனால், அது தோல்வியில் முடிந்ததால், வேறு வழியின்றி காவல்துறையை அணுகினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்.நாராயணன் தனது கருத்தைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
“என் மருமகள் என் மீது வழக்கு தொடர்ந்ததில் எனக்கு ஆச்சரியம் இல்லை. என் மருமகள் வீட்டை விட்டு சென்று 14 மாதங்கள் ஆகின்றன. அவள் வீட்டை விட்டு போனதே எனக்கு தெரியாது. இத்தனை மாதங்களாக அவள் எந்த புகாரும் கொடுக்கவில்லை. எனது தந்தை 1960-லேயே வரதட்சணைக்கு எதிராக போராடினார். நானும் வரதட்சணைக்கு எதிரான செய்தியை படங்களாக எடுத்தவன். இது என் குடும்பத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம். இதை நாங்கள் நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம்.”
மேலும், “இது என் மகனும், மருமகளும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் சந்தோஷத்துக்காக நாங்கள் அதை எதிர்க்கவில்லை” என்றும் கூறினார்.
Edited by Siva