ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி, அது உக்ரைன் போருக்கான நிதி ஆதாரமாக பயன்படுகிறது என அமெரிக்கா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தச் செய்வதே எங்கள் நிர்வாகத்தின் முன்னுரிமையாகும். வர்த்தக ஒப்பந்தம் வெகு தூரத்தில் இல்லை.
அடுத்த சில வாரங்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். இந்தியாவுடன் எங்கள் எதிர்பார்ப்புகள் எப்போதும் அதிகம் இருக்கும். அதிபர் டிரம்ப் மற்ற நாடுகளை விமர்சித்தாலும், பிரதமர் மோடியைப் பற்றி எப்போதும் பாராட்டுகள் தெரிவிப்பார். அவர்களுக்கு இடையே ஒரு வலுவான நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.
இந்நிலையில், வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்ததாவது:“இருதரப்பும் திருப்தியடைந்துள்ளன. நவம்பருக்குள் ஒரு நல்ல ஒப்பந்தம் எட்டப்படும் என பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளார்” என்றார்.
ஆனால், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூாட்னிக் வலியுறுத்தியதாவது:“ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால்தான் வர்த்தகப் பிரச்னைகள் தீரும்” எனக் கூறினார்.
இதனால், அமெரிக்கா – இந்தியா உறவில் குழப்பம் நிலவுகிறது. ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்தச் செய்வதே அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருக்க, இந்தியா அதை ஏற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே சமயம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் –“எந்த காரணம் கொண்டும் ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மாட்டோம்” என்று தெளிவாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.