Rajini-Kamal: ரஜினிக்கும் எனக்கும் இருக்குற ஒரே கர்வம் இதுதான்.. ஒன்னு சொன்னாலும் நச்-னு சொன்ன கமல்
CineReporters Tamil September 12, 2025 11:48 PM

Rajini-Kamal:ஒரு வளர்ச்சிக்கு பிறகு என்னதான் உச்சத்தில் இருந்தாலும் மற்றவர்களை புகழ்ந்து யாரும் பெரும்பாலும் பேச மாட்டார்கள். ஆனால் சினிமாவை பொறுத்த வரைக்கும் இன்று கோலிவுட்டில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினியும் கமலும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து இன்றுவரை மேடையில் பேசி தங்களது நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அதைப் பற்றி முன்பு ஒரு பழைய பேட்டியில் கமல் கூறி இருப்பது தற்போது வைரலாகி வருகின்றது.

அதுவும் பெரும்பாலும் கமலை பற்றி ரஜினி கூறும் பொழுது கமலை உயர்த்தி பேசி தான் பல மேடைகளில் பேசியிருக்கிறார் ரஜினி. இதைப்பற்றி அந்த பேட்டியில் கமல் கூறும் பொழுது ‘அதைப் பற்றி நீங்கள் என்ன காரணம் சொன்னாலும் நல்லவர் என்ற ஒரே காரணம்தான். அதைவிட அவருக்கு தன்னம்பிக்கை மிக அதிகம். இப்படி சொல்லுவதனால் நாம ஒன்னும் குறைந்து போக மாட்டோம் என்ற ஒரு தன்னம்பிக்கை வேண்டும். அது ரஜினிக்கு நிறையவே இருக்கிறது.

ஆரம்பத்தில் அவரை நான் ஒரு சதுர கண்ணாடி வழியாகத்தான் பார்த்தேன். ஸ்கிரீன் டெஸ்டுக்காக வந்திருந்தார். அவருக்கு முன் அனைவருமே ரிஜெக்ட் செய்யப்பட்டு இருந்தார்கள். கடைசியாக அவர் மட்டுமே உட்கார்ந்து இருந்தார். அப்போதுதான் அவரை நான் முதன்முதலாக பார்த்தேன். அதில் இருந்தே இப்போது வரைக்கும் அவரிடம் இருந்து நான் கற்றுக் கொள்வது அந்த தன்னம்பிக்கை தான். அது மட்டுமல்ல, அடைய வேண்டிய இலக்கு என்ற ஒன்று அனைவருக்கும் இருக்கும்.

அந்த இலக்கை பார்த்து குறி வைத்தே அதை நோக்கி நடை போட்டு அதை எத்தியவர். அதுவும் பயமே இல்லாமல் அதை நோக்கி நடந்தவர். அதை நான் ரஜினியிடம் பார்த்து இருக்கிறேன். சில சமயம் அதை பார்த்து நான் கற்றுக் கொள்ளவும் செய்திருக்கிறேன். இவ்வளவு தன்னம்பிக்கை நமக்கும் இருக்கணும் என நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் வசனம் சொல்ல திக்கி தடுமாறும் பொழுது அவர் சிகரெட் போட்டு பிடிக்கும் பொழுது இரண்டு தடவை கீழே போட்டு விடுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.

rajini_kamal

ஆனால் விடாமல் அதை முயற்சி செய்து கொண்டே இருப்பார். அவருக்கு சிகரட்டை போட்டு பிடிப்பது நன்றாகவே வரும். இருந்தாலும் ஷாட்டுக்கு முன்பு வரை அதை ப்ராக்டிஸ் செய்து கொண்டே இருப்பார். தன்னுடைய வெற்றியையும் பாராட்டையும் பற்றி அவர் பேசும் பொழுது ஏதோ அதிர்ஷ்டத்தால் வந்தது என பேசுவார். எனக்கு ஒரு பழமொழி மிகவும் பிடிக்கும். அதாவது தகுதியானவர்களுக்கு அதிர்ஷ்டம் என்று எதுவுமே கிடையாது என்பதுதான். அது ரஜினிக்கு மிகவும் பொருந்தும்.

நாங்கள் இருவருமே இறக்கை கட்டிக் கொண்டு வந்த தேவதைகளாக என்றைக்குமே நாங்கள் கருதியது கிடையாது. அவருக்கும் தான் கண்டக்டர் ஆனது ஞாபகம் இருக்கிறது. எனக்கும் கிளாப் அடித்துக் கொண்டு ஒரு கடை நிலை ஊழியராக இருந்ததும் ஞாபகம் இருக்கிறது. அதிலிருந்து வந்தவர்கள் தான் நாங்கள். எங்கள் முயற்சியிலிருந்து வந்தோம்.

ஆனால் எங்களுக்கு உதவி செய்தவர்களை என்றைக்குமே மறக்க முடியாது. நாங்கள் கர்வம் படக்கூடிய விஷயம் என்னவெனில் எங்களுக்கு கிடைத்த குருமார்கள். அவர்கள் மிகவும் அற்புதமான மனிதர்கள் .இதை வேண்டுமென்றால் நாங்கள் கர்வமாக சொல்லிக்கலாம். இந்த மாதிரி யாருக்கும் அமையாது என’ என்று கமல் அந்த பேட்டியில் கூறி இருப்பது இப்போது வைரலாகி வருகின்றது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.