"வைகை புயல்" வடிவேலு – தமிழ் சினிமாவின் நேசிக்கப்படும் நடிகர்களில் ஒருவர். சாதாரண பின்னணியில் இருந்து தொடங்கி, பல தசாப்தங்களாக உழைத்துத் தனித்துவமான கலைஞராக உயர்ந்துள்ளார்.
1980களின் இறுதியில் அவர் சினிமாவுக்குள் வந்தபோது, சிறிய, பெயர் தெரியாத பாத்திரங்களில்தான் தன்னை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால், அவர் காட்டிய உடல் மொழியும், முகபாவனைகளும் அவரை தனித்து அடையாளம் காட்டின.
சரியான நேரத்தில் வந்து விழும் நகைச்சுவை வார்த்தைகள் விரைவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. அடக்கப்பட்டவனாகவும், ஏமாந்தவனாகவும், எப்போதும் தோற்று போகும் கதாபாத்திரங்களில் நடித்தாலும், சிரிப்பையும் இரக்கத்தையும் தூண்டும் தனி பாணியை உருவாக்கிக் கொண்டார்.
பிற்காலத்தில் வடிவேலு நகைச்சுவையைத் தாண்டி தனது திறமையை விரிவுபடுத்தினார். "இம்சை அரசன் 23-ம் புலிகேசி"யில் வரலாற்று கதாநாயகனாக நடித்தது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.
அந்த படத்துக்கு அவருக்கு மாநில அரசின் விருது கிடைத்தது. சமீபத்தில் வந்த "மாமன்னன்", "மாரீசன்" போன்ற படங்களில் அவர் காட்டிய ஆழமான நடிப்பு, அவரது புது பரிணாமத்தை வெளிப்படுத்தியது. காமெடியையும், உணர்ச்சியையும் ஒன்றாகக் கலந்த பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரங்களை எளிதில் நடித்ததற்காகவே பிலிம் ஃபேர் சவுத், தமிழ்நாடு மாநில விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றார்.
அவரது வேகமான வசனங்கள், நையாண்டி கலந்த ஒற்றை வரிகள், உடல் நகைச்சுவை, அதோடு சேரும் உணர்ச்சி – இவை அனைத்தும் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் , மக்களின் அன்றாட வாழ்வின் பல தருணங்களில் நிலைத்து நிற்கின்றன.
இன்று (செப் 12) அவர் தனது 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
'கான்ட்ராக்டர் நேசமணி'2001-ஆம் ஆண்டு வெளிவந்த "ப்ரெண்ட்ஸ்"-படத்தில் வடிவேலு நடித்த கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. "ஆணியே புடுங்க வேண்டாம்" என்று அவர் அந்தப் படத்தில் பேசிய வசனம் எத்தனை பேரின் வாழ்க்கையில் எத்தனை தருணங்களில் பொருத்தமாக இருந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
உடல் மொழி, நேர்த்தியான நகைச்சுவை நேரம், மற்றும் சாதாரண மனிதரின் சிக்கல்களை வேடிக்கையாக காட்டிய விதம் அந்த கதாபாத்திரம் வெற்றி பெற்றதற்கு காரணங்களாகும்.
நேசமணி ஒரு பெயிண்டிங் கான்ட்ராக்டராக ஜமீன்தாரின் அரண்மனையில் வேலை பார்க்கிறார். அவருடன் இருக்கும் தொழிலாளர்கள் எப்போதும் குழப்பம் செய்து அவரை பிரச்னையில் சிக்க வைப்பார்கள். அதில் மிகவும் பிரபலமான காட்சி – சுத்தியல் தவறி நேசமணியின் தலையில் பட்டு அவர் மயங்கி விழுவது. இந்தக் காட்சிதான் அவரது நகைச்சுவை வாழ்க்கையின் முக்கிய தருணமாக மாறியது.
வடிவேலுவின் முகபாவங்கள், தனித்துவமான வசன உச்சரிப்பு, ஆகியவை நேசமணியை பார்த்து சிரிக்கவும் , அதே சமயம் அவர் மீது இரக்கப்படவும் வைத்தது. தன்னிடம் வேலை பார்ப்பவர்களை திட்டும் காட்சிகள், அடிபடும்போது செய்யும் உடல் மொழி, அவ்வளவு சிரிப்பை தந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நேசமணி கதாபாத்திரம் மீண்டும் ஆன்லைன் உலகம் முழுவதும் பேசப்பட்டது. "#Pray_for_Nesamani" என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது. சுத்தி விழும் காட்சி குறித்து ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள், சித்திரங்கள், நகைச்சுவை பதிவுகள் வெளிவந்தன. இதன் மூலம் புதிய தலைமுறையினரும் நேசமணியை ரசித்தார்கள்.
'கைப்புள்ள'2003-ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான "வின்னர்" படத்தில் வடிவேலு நடித்த 'கைப்புள்ள' கதாபாத்திரம் தமிழில் மறக்க முடியாத மற்றுமொரு நகைச்சுவை வேடமாக பாராட்டப்படுகிறது. கைப்புள்ள ஒரு சாதாரண கிராமத்து மனிதராக வலம் வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை' நடத்தி வரும் கைப்புள்ளையின் சண்டை காட்சிகளும் ரசிக்க வைக்கும். அவர் காட்டும் திமிரும், வீராப்பும் பெரும்பாலான நேரங்களில் யாராலும் மதிக்கப்படாது.
அவருக்கும் கட்டதுரை என்ற வேடத்தில் நடித்த ரியாஸ் கானுக்கும் இடையிலான போட்டி, எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பை வரவைக்கும். இந்த சண்டைகளும் வசனங்களும் பார்வையாளர்களை சிரிக்கச் செய்ததோடு, கைப்புள்ளயின் அப்பாவித்தனத்தால் இரக்கமும் வரச் செய்தது.
"இந்த கோட்ட தாண்டி நான் வர மாட்டேன், நீயும் வரக் கூடாது", "அது போன வாரம், இது இந்த வாரம்" போன்ற வசனங்களும், அதில் அதிகம் ரசிக்கப்பட்ட "வேணா வலிக்குது அழுதுடுவேன்" என்ற வசனமும் மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடியதாக மாறிப் ோனது.
அந்த படத்தில் கைப்புள்ள கதாபாத்திரம் சண்டையிடும் போது, காலில் அடிபட்டதாக நடித்திருப்பார் வடிவேலு. அதனால் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அவர் நொண்டி நடப்பார். ஆனால், உண்மையில் அந்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாக வடிவேலுக்கு காலில் அடிப்பட்டு இருந்ததாகவும், அதனால் அந்த காட்சிகள் அவருக்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டதாகவும், படத்தின் இயக்குநர் சுந்தர் சி மற்றொரு தருணத்தில் தெரிவித்திருந்தார்.
இன்றும் கூட, "தூங்கு டா கைப்புள்ள, மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது எவ்ளோ ஆனந்தம், இந்த ஊர் இன்னுமா நம்புது?" போன்ற கைப்புள்ளையின் வசனங்களை கொண்டு மீம்ஸ், வீடியோ கிளிப்கள், இணையத்தில் பரவி வருகின்றன. ஒரு சாதாரண துணை வேடத்தை கூட வடிவேலு தன் நகைச்சுவை திறமையால் எப்படி முன்னிலைப்படுத்தினார் என்பதற்கு கைப்புள்ள மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
இசக்கி1992-ல் வெளியான "தேவர் மகன்" படத்தில் வடிவேலு நடித்த இசக்கி ஒரு சின்ன வேடம்தான், ஆனாலும் அந்த படம் முழுக்க நினைவில் நிற்கும் வகையில் இருந்தது. பெரிய தேவர் குடும்பத்தில், இசக்கி ஒரு எளிமையான, உண்மையுடன் வேலை செய்யும் உதவியாளராக காட்டப்படுகிறார். குறிப்பாக கதாநாயகன் சக்திவேல் (கமல்ஹாசன்) மீது அவருக்கு இருக்கும் அன்பு, நம்பிக்கை, பாசம், விசுவாசம் பார்வையாளர்களை கவர்ந்தது.
வடிவேலுவின் வழக்கமான கதாபாத்திரங்கள் போல வெளிப்படையான நகைச்சுவை இல்லாமல், அவர் இயல்பான, தரமான நடிப்பை வெளிக்காட்டவும் இந்த படம் அவருக்கு வாய்ப்பாக அமைந்தது. இசக்கி பேசும் அப்பாவி வசனங்களும், சின்ன சின்ன அச்சத்துடனான முகபாவங்களும், சரியான நேரத்தில் அவர் செய்யும் நகைச்சுவையும் படத்தோட கலந்துவிட்டது. குடும்பத்துக்குள் நடக்கும் சண்டை, அரசியல், வன்முறையில நடுவில் இசக்கி பாத்திரம் சிறிய சிரிப்பையும், அதே சமயம் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது.
இசக்கியின் தாக்கம் இன்றும் தமிழ் சினிமாவில் பேசப்படுகிறது. இந்த இசக்கி பாத்திரத்திலிருந்து தான் வடிவேலுவுக்காக தனி கதாபாத்திரங்களும் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.
"மாமன்னன்" படத்தில் உள்ள வடிவேலுவின் கதாபாத்திரம், இசக்கியின் மறுபடைப்பு என்று இயக்குநர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டிருக்கிறார். வடிவேலுவின் இசக்கி சிரிப்பும் உணர்ச்சியும் கலந்த, ஆழம் கொண்ட கதாபாத்திரமாக இருந்தது.
"ஸ்டீவ் வாக்"2001-ல் வெளியான "மனதை திருடி விட்டாய்" படத்தில் வடிவேலு "ஸ்டீவ் வாக்" எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பெயருக்கு ஏற்றாற் போல, ஸ்டைலாக ஆங்கிலம் பேச முயலும் கதாபாத்திரமாக அது இருக்கும். "சிங் இன் த ரெயின்" என்று எந்த ஸ்ருதியும் இல்லாமல் அவர் பாடும் இரண்டு வரி ஆங்கிலப் பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இந்த படத்தில் பிரபுதேவா, விவேக் போன்ற முன்னணி நடிகர்களோடு, வடிவேலு தனக்கே உரிய காமெடியால் பிரபலமானார்.
ஒரு காட்சியில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என பல பாத்திரங்களில் அவரே நடித்திருப்பார். .
வடிவேலுவின் முகபாவங்கள், உடனடியாக மாறும் வேடங்கள், மற்றும் "Why blood? Same blood!" என்ற வசனம் ரசிகர்களிடம் வைரலானது. படத்தின் கதாநாயகி காயத்ரி ஜெயராம் ஒரு காட்சியில் வடிவேலுவை சரமாறியாக திட்டிக் கொண்டிருப்பார். அவர் பேசும் வார்த்தைகள் கேட்காவிட்டாலும், அதற்கு வடிவேலு கொடுக்கும் பதில்கள் சிரிப்பை தூண்டும். தன்னை போன்றே திட்டு வாங்கி வெளியே வரும் பிரபுதேவாவை பார்த்து அந்த காட்சியின் இறுதியில் Why blood? Same blood!" என்று அவர் கூறிய வசனம் எத்தனை பேருக்கு எத்தனை தருணங்களில் பொருத்தமாக இருந்திருக்கும்.
'முருகேசா'2005-ல் வெளிவந்த சூப்பர்ஹிட் தமிழ் படம் "சந்திரமுகி"யில் வடிவேலு நடித்த முருகேசன் பாத்திரம், சீரியசான கதைக்குள் ரஜினிகாந்துடனான வடிவேலுவின் காட்சிகள் நகைச்சுவையை புகுத்தி ரசிகர்களை கவர உதவியது.
முருகேசன், வேட்டையபுரம் அரண்மனையின் பராமரிப்பாளர். பேய் என்ற சொன்னால் பயந்துபோகும், சந்தேக மனப்பான்மையுள்ள, மூடநம்பிக்கையோடு இருக்கும் கதாபாத்திரம் முருகேசன். இந்த கதாபாத்திரத்தை பிரபலமாக்கியது வடிவேலுவின் சரியான நகைச்சுவை நேரமும், உடல் அசைவுகள், முகபாவனைகளும். எப்போதும் பயந்து ஓட முயற்சி செய்து, ஆனால் அதைவிட பெரிய பிரச்சினையிலே மாட்டிக்கொள்ளும் காட்சிகள் இன்னும் சிரிப்பை தருகின்றன.
இந்த கதாபாத்திரத்தை முருகேசன் என்பதை விட 'கோவாலு' என்று ரசிகர்கள் நினைவில் வைத்துக் கொள்வர். பயத்தில் அதிர்ந்து போய் நிற்கும் முருகேசன், 'கோபால்' என்ற உதவியாளரை 'கோவாலு' என்றே அழைப்பார். இந்த வசனம், தமிழ் சமூக ஊடகங்களில் பிரபல மீமாக மாறியது.
முருகேசனின் அப்பாவித்தனம், உடல் நகைச்சுவை, துல்லியமான வசன உச்சரிப்பு ஆகியவை படத்துக்கே ஒரு தனி மகிழ்ச்சியை கொடுத்தன. இந்த கதாபாத்திரத்துக்காக வடிவேலு ஃபில்ம் ஃபேர் விருது பெற்றார். இன்றும் முருகேசன் — வடிவேலுவின் மறக்க முடியாத, பார்வையாளர்களால் அதிகம் நேசிக்கப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கிறது.
பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த போதிலும், வடிவேலுவின் சினிமா வாழ்வில் கிட்டத் தட்ட 10 வருடங்கள் இடைவெளி ஏற்பட்டது. 2011 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வடிவேலுவின் அரசியல் பிரசாரம், மற்றும் இதனைத் தொடர்ந்த வருடங்களில் அவரது திரை வாழ்வில் தொய்வு ஏற்பட்டது.
ஏறத்தாழ 5 ஆண்டு முழுமையான இடைவெளிக்குப் பின்னர் 2022ம் ஆண்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியானது. இதன் பின்னர் வடிவேலுவின் பழைய நகைச்சுவை ஆதிக்கம் தமிழ் சினிமாவில் இல்லை என்றாலும், கனம் மிகுந்த கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு