3 நாட்களில் முடிவடைய உள்ள கெடு! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?- செங்கோட்டையன் பேட்டி
Top Tamil News September 13, 2025 04:48 AM

அதிமுக, ஒருங்கிணைப்பு பணியை தொடங்க செங்கோட்டையன் விதித்த கெடு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும், 10 நாட்களுக்குள் இதற்கான பணியை தொடங்காவிட்டால் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்வோம் என கடந்த 5.ம் தேதி அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். இதனையடுத்து அவரது கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். பதவி இல்லை என்றாலும்  காலக்கெடு முடிந்ததும் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள போவதாக செங்கோட்டையன் அறிவித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சென்று அமித்ஷா.வை சந்தித்தார் செங்கோட்டையன். இதனிடையே, ஒருங்கிணைப்பு கோரிக்கையை முன்வைத்த செங்கோட்டையனை சந்தித்து அவரது ஆதரவாளர்களும், டிடிவி மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 7.வது நாளாக இன்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆதரவாளர்கள் செங்கோட்டையனை சந்தித்தனர். செங்கோட்டையன் விதித்த காலக்கெடு இன்னும் 3 நாட்களில் முடிவடைவதால், அடுத்த கட்டமாக செங்கோட்டையன் எடுக்க போகும் நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ், டிடிவி ஆகியோருடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ள செங்கோட்டையன், ஒருங்கிணைப்பு மனநிலையில் உள்ள மேலும் சில அதிமுக முன்னாள் அமைச்சர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. 

இதனிடையே கோபிசெட்டிபாளையம் இல்லத்தின் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ செங்கோட்டையன். “எல்லோரும் நினைப்பதை போல நல்லதே நினைப்போம், நல்லதே நினைத்து நல்லதையே செய்வோம்” என்றார். அடுத்த கட்ட நடவடிக்கை, அடுத்து என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்.?என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.ஏ.செங்கோட்டையன் அதற்கு இன்னும் டைம் இருக்கிறது எனக் கூறி சென்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.