காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த விவாதம் நடத்த ஹமாஸ் அரசியல் தலைவர்கள் செப்டம்பர் 9ஆம் தேதி கத்தார் தலைநகர் தோஹாவில் கூடினர். அந்த நேரத்தில், இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென ஹமாஸ் அலுவலகத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினார்கள். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் ஒரு கத்தார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தனர்.
அமைதி முயற்சிகளுக்கான மத்தியஸ்த நாடு மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது உலகம் முழுவதும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா., இந்தியா, ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ளன.முன்னதாக, கத்தார் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர், “இந்த தாக்குதல் கோழைத்தனமானது” எனக் கண்டித்திருந்தார்.
இதுகுறித்து, கத்தார் பிரதமர் அப்துல் ரஹ்மான் அல் தானி செய்தியாளர்களிடம் பேசியதாவது:“ஒட்டுமொத்த வளைகுடா பகுதியும் தற்போது பெரும் அபாயத்தில் உள்ளது.இஸ்ரேலின் அட்டூழியத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதற்காக விரைவில் அரபு – இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும்.அதில், இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கை குறித்த முடிவுகள் எடுக்கப்படும்,” என அவர் எச்சரித்தார்.வளைகுடா பகுதியின் பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கு அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இந்த தாக்குதல் மாறியுள்ளது.