“வீட்டை விட்டு வெளியே வா விஜய், பனையூரிலேயே படுத்துக் கிடக்கிறாயா?” என்று அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் இருக்கும் திமுக ஆதரவாளர்கள் மற்றும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கேலி செய்த நிலையில், இந்த விமர்சனங்களுக்கு விடை அளிக்கும் விதமாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் சுற்றுப்பயணத்தைநாளை முதல் தொடங்குகிறார். “நான் வரேன்” என்ற தலைப்புடன், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனது முதல்கட்ட பயணத்தை மேற்கொள்கிறார். இந்த பயணம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாஸ் ஹீரோ அரசியலில் தனது முதல் அடியை எடுத்து வைக்கும் நிலையில், அவருக்கான அரசியல் பயணம் மற்றும் சவால்கள் நிறைய உள்ளன. குறிப்பாக, “நடிகர் நாடாள முடியுமா?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற நடிகர்கள் நாட்டை ஆண்ட வரலாற்றை விஜய் கையிலெடுத்துள்ளார். அவரது பிரசார வாகனத்தில் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் பெரிய படங்கள் இடம்பெற்றுள்ளன. இது, அவர் அ.தி.மு.க.வின் ஆதரவாளர்களையும் ஈர்க்க முயல்கிறார் என்பதை காட்டுகிறது.
விஜய்யின் இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கம், “உங்களது பகுதிக்கு, உங்களிடம் உங்களில் ஒருவனாக வருகிறேன்” என்பதை மக்களிடம் உணர்த்துவதுதான். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்வைத்து, ஆட்சிக்கு வந்தால் அவற்றை எப்படித் தீர்ப்போம் என்பதை பற்றி விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே அவரது பேச்சின் முக்கிய மையப்புள்ளியாக இருக்கும்.
அதே சமயம், ஆளுங்கட்சியான தி.மு.க. தரப்பில் இருந்து விஜய்க்கு கடுமையான அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அவரது பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறை தரப்பில் இருந்து கடுமையான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சத்திரம் பேருந்து நிலையம் போன்ற முக்கியமான மற்றும் கூட்டம் அதிகம் சேரும் இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மரக்கடை பஜாரில் மட்டும் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, விஜய் தனது அறிக்கையில், “எங்கள் மீது வழக்கு போடுகிறீர்கள், எங்களை அடக்குகிறீர்கள். ஆளுங்கட்சியான உங்களுக்கு எங்களை பார்த்தால் பயமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த சுற்றுப்பயணத்தில் விஜய்க்கு பல சவால்கள் உள்ளன. அவரது பேச்சுகள் எந்த அளவுக்கு மக்களின் கவனத்தை ஈர்க்கும், தேசிய அளவிலும் மாநில அளவிலும் விவாதங்களை உருவாக்கும் என்பது அவரது பேச்சை பொறுத்து அமையும். ஏற்கனவே, அவரது மதுரை மாநாட்டு பேச்சு, தேசிய ஊடகங்களில் கிட்டத்தட்ட 10 நாட்கள் விவாத பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவரது ரசிகர் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது ஒரு பெரிய சவாலாக உள்ளது. பொதுச் யலாளர் புஸ்ஸி ஆனந்த்தொண்டர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, அரசு கட்டிடங்கள் மீது ஏறுவது, பட்டாசு வெடிப்பது, ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் கூட்டத்தை சேர்ப்பது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இவை, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத ஒரு அரசியல் பயணமாக இது அமைய வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட முயற்சிகள்.
விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கு வலுவாக இருப்பதால் அவர் தனித்து நின்றாலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி போன்ற தலைவர்கள் விஜய்யுடன் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக மறைமுகமாக தெரிவித்துள்ளனர். மேலும், அ.தி.மு.க.வில் உள்ள சில முக்கிய புள்ளிகள் தவெகவு வர வாய்ப்பு உள்ளது என்றும் வதந்திகள் பரவுகின்றன. எனினும், அரசியல் களத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே நிதர்சனம்.
இந்த சுற்றுப்பயணம் விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு புதிய திசையை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டிசம்பர் 20-ஆம் தேதிக்கு பிறகு விஜய் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
Author: Bala Siva