தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புறப்பட்டுச் செல்கிறார். மேலும் நாளை காலை 10:30 மணி முதல் 11 மணி வரை திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன் மக்கள் மத்தியில் விஜய் தேர்தல் பரப்புரையைத் தொடங்க உள்ளார். குறிப்பாக இந்தப் பிரச்சாரக் குழுக் கூட்டத்தில் விஜய் 15 நிமிடங்கள் மட்டுமே பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி சனிக்கிழமை நாட்களில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், “தவெக தலைவர் விஜய் வாகனத்தை இருசக்கர வாகனங்களில் யாரும் பின்தொடர வேண்டாம். கர்ப்பிணிகள், கைக்குழந்தை உள்ள பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் வீட்டிலிருந்தபடி நேரலையில் காணுங்கள். பட்டாசு வெடிப்பதை, வரவேற்பு நடவடிக்கைகளை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வாகனத்தை நிறுத்தவும், கண்ணியத்தோடு நடந்துகொள்ளவும்
அரசு, தனியார் கட்டடங்கள், மின்மாற்றிகள், கம்பங்கள், சிலைகள், தடுப்புகள் மீது ஏற வேண்டாம். நீதிமன்ற உத்தரவுபடி, சாலைகளில் பேனர்கள், கொடிக்கம்பங்கள், அலங்கார வளைவுகள் வைப்பதை தவிருங்கள். காவல் துறை விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டு, கூட்டம் முடிந்தபின் அமைதியாக கலைய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.