ஸ்டெர்லைட் வழக்கில் கைதான மீனவருக்கு மறு உத்தரவு வரும் வரை, வாரம் ஒரு முறை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, 22.5.2018 அன்று, மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளை மீறி கும்பலாக சேர்ந்து சட்ட விரோதமாக கூடி பெரும் கலவரத்தை ஏற்படுத்தினர் என்று தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார் , . அதுமட்டுமல்லாமல் காவல்துறையினரை கடுமையாக மிரட்டி கற்களை வீசி பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கோட்டில் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் நானும் பங்கேற்றதாக கூறி என் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மீனவர் கூறியிருந்தார் . மேலும் இந்த வழக்கில் நான் ஆஜராகவில்லை என்று கூறி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் என்னை கைது செய்து கடந்த மாதம் 19-ந் தேதி சிறையில் அடைத்தனர். மீனவர் ஆகிய என்னை நம்பி எனது குடும்பம் உள்ளது. தற்போது நான் சிறையில் இருப்பதால் எனது குடும்பத்தினர் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.அவர் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது,அப்போது நீதிபதி, மனுதாரர் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஆஜராக வேண்டும். மேலும் மறு உத்தரவு வரும் வரை, வாரம் ஒரு முறை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.