கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து திருப்பதி செல்ல தயாராக இருந்த தமிழக அரசுப் பேருந்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ஓட்டுநரும் நடத்துநரும் அருகில் இல்லாத நேரத்தில் ஒருவர் அப்பேருந்தை இயக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டுநரும் நடத்துநரும் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் தமிழக அரசுப் பேருந்து ஒன்று சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுள்ளதாக அங்குள்ள போலீசார் தகவலளித்தனர். தகவலின் பேரில் உடனடியாக சென்னை காவல்துறை அங்கு சென்று விசாரணை நடத்தி பேருந்தை மீட்டது.
மேலும், பேருந்தை கடத்திச் சென்றவராக ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு (வயது 24) என்பவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு பஸ்நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.