சமூக ஊடகங்களில் தன்னை குறிவைத்து தாக்கிப் பேச பணம் கொடுக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது, 'இ-20' பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாகவும், (80 சதவீத பெட்ரோல், 20 சதவீத எத்தனால் கலந்தது). இதனால், வாகனத்தின் மைலேஜ் குறையும், இன்ஜின் பழுதடையும் என, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 'இ 20 பெட்ரோல் கார்பன் வெளியேற்றத்தையும், எரிபொருள் புதைபடிவ இறக்குமதியையும் குறைக்கும்' என, தெரிவித்துள்ளது. இந்நிலையில், டில்லியில் நடந்த ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, ஆட்டோமொபைல் தொழிலிலும் கூட அரசியல் உள்ளதாகவும், எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரத்தில், அரசியல் ரீதியாக சமூக ஊடகங்களில் தன்னை குறிவைத்து தாக்கிப் பேச பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
'இ-20' பெட்ரோல் விவகாரத்தில் அனைத்தும் தெளிவாக உள்ளது என்றும், இது, செலவு குறைந்தது; மாசு இல்லாதது என்று கூறியுள்ளார். அத்துடன், வெளி நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கிறதாகவும், .புதைபடிவ எரி பொருட்களை இறக்குமதி செய்ய நம் நாடு பெரும் தொகையை செலவிடுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
'இ-20' பெட்ரோல் மூலம், இது கணிசமாக குறையும் என்றும், இவ்வாறு சேமிக்கப்பட்ட பணத்தை நம் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது நல்ல நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார். மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் கிடைப்பதால், நம் விவசாயிகள், 45,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும், மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்பதை உலகம் ஒப்புக் கொள்கிறது. டில்லியில் நிலவும் மாசால், அங்குள்ளவர்கள் 10 ஆண்டுகள் ஆயுட்காலத்தை இழப்பர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று பேசியுள்ளார்.
அத்துடன், மாநில போக்குவரத்து கழகங்கள் மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டணத்தில் மாற்றம் செய்ய ஆய்வு நடந்து வருகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் வர்த்தக வாகனங்களை இயக்க 10 தேசிய நெடுஞ்சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று நிகழ்ச்சியின் போது கூறியுள்ளார்.