`இரண்டு மாதங்களுக்குப் பிறகு பொது வெளிக்கு வந்த ஜெகதீப் தன்கர்' - ஆச்சர்யத்தில் எம்.பி.க்கள்
Vikatan September 13, 2025 09:48 PM

இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சி.பி ராதாகிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று அவருக்கு டெல்லியின் குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சி.பி ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழா

எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்த ஜெகதீப் தன்கர், துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடந்து முடியும் வரை அதாவது கடந்த இரண்டு மாதமாகப் பொதுவெளியில் வரவில்லை.

அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் ரகசியமாகவே இருந்தது. இது தொடர்பாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தன.

இந்த நிலையில்தான், அவர் சி.பி ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

ஜெகதீப் தன்கர் - Jagdeep Dhankhar

இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்திலும் கலந்துகொண்டார். வெங்கையா நாயுடு, ஹமீத் அன்சானி போன்ற முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசையில் அமர்ந்திருந்தவர், வெங்கையா நாயுடுவிடம் சிரித்துப் பேசிக்கொண்டே இருந்தார்.

ஜெகதீப் தன்கர், ``பொது வாழ்வில் சிபி ராதாகிருஷ்ணனின் பரந்த அனுபவத்தால், துணை குடியரசுத் தலைவர் பதவி பெரும் மரியாதையையும் புகழையும் அடையும்." எனவும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

`அரசியலமைப்பு பதவியிலிருப்பவர், நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முயல்கிறார்' - ஜெக்தீப் தன்கர் தாக்கு
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.