Lokesh Kanagaraj: சினிமா உலகில் நடிகர், இயக்குனர் என யாராக இருந்தாலும் அவரின் முந்தைய படத்தின் வெற்றி, தோல்வி மற்றும் அந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என்பதை பொறுத்தே அவரின் அடுத்த படத்தை மதிப்பிடுவார்கள். பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் ஒரே ஒரு தோல்வி படத்தை கொடுத்துவிட்டால் தயாரிப்பாளர்கள் அந்த நடிகர் பக்கம் போக மாட்டார்கள். அல்லது சம்பளத்தை குறைத்து பேசுவார்கள். இது இயக்குனர்களுக்கும் பொருந்தும். அதனால்தான் சினிமாவில் நீடித்து நிற்க தொடர் வெற்றி படங்களை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் காணாமல் போய்விடுவார்கள்.
ஒரு பெரிய இயக்குனர் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே அவர் இயக்கத்தில் வேறொரு நடிகர் நடிக்கும் படத்தை முடிவு செய்வார்கள். ஆனால் அந்த இயக்குனர் இயக்கி வெளியான படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டால் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகருக்கு இயக்குனர் கால் செய்தால் அந்த நடிகர் ஃபோனை கூட எடுக்க மாட்டார். இதுதான் சினிமா. நடிகர்கள் எப்போதும் ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குனர்களின் முதுகில் மட்டுமே சவாரி செய்ய ஆசைப்படுவார்கள். தோல்வி கொடுத்த ஒரு இயக்குனரை அழைத்து பெரும்பாலான நடிகர்கள் படம் கொடுக்க மாட்டார்கள்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறியவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய படங்கள் இவரை இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனராக மாற்றியது. வேட்டையன் படத்திற்கு வராத எதிர்பார்ப்பு கூலி படத்திற்கு வந்தது. அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்ததுதான்.
இந்த படம் 1000 கோடி வசூலை பெறும் முதல் தமிழ் சினிமாவாக இருக்கும் என பலரும் சொன்னார்கள். ஆனால் கூலி படத்திற்கு லோகேஷ் கனகராஜ் அமைத்த கதை, திரைக்கதை மற்றும் காட்சிகள் சாமானிய ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. எனவே இப்படம் அதிகபட்சமாக 500 கோடி வசூல் செய்திருக்கலாம் என்கிறார்கள்.
கூலி படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ இடத்தில் நடித்திருந்தார் அவரின் வேடம் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த படத்தில் அமீர்கான் நடித்த போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடிக்கும் ஒரு ஹிந்தி படம் பேசப்பட்டது. ஆனால் கூலி ரிசல்ட்டை பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர்கான் நடிக்க வாய்ப்பே இல்லை என வலைப்பேச்சு அந்தணன் ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார். அமீர்கான் படம் மட்டும் இல்லை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி கமல் இணைவதாக பேசப்படும் படமே எனக்கு சந்தேகம்தான்.. கூலி ரிசல்ட் ரஜினி, கமல் மனதை மாற்ற வாய்ப்பு இருக்கிறது’ என அவர் பேசியிருக்கிறார்.