உலகிலேயே முதன்முறையாக, அல்பேனியாவில் ஊழல் தடுப்பு துறைக்கு செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புதிய முயற்சி, அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மையையும், ஊழலற்ற நிர்வாகத்தையும் உறுதிப்படுத்தும் என அல்பேனிய பிரதமர் எடி ராமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த AI அமைச்சர், குறிப்பாக அரசு ஒப்பந்தங்களில் ஊழல் நடக்காமல் தடுக்கும் பணியை மேற்கொள்வார். இந்த அமைச்சர், மனிதத் தலையீடுகள் இல்லாமல், 100% வெளிப்படைத்தன்மையுடன் பணிகளை முடிப்பார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், அரசாங்கத்தின் ஒவ்வொரு ஒப்பந்தமும் நியாயமாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் இருப்பதை உறுதி செய்யும். இது அல்பேனியாவில் நீண்ட காலமாக இருந்துவரும் ஊழல் சிக்கலைத் தீர்க்க ஒரு புதுமையான முயற்சியாகும்.
1990-ஆம் ஆண்டு கம்யூனிச ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு, அல்பேனியா ஊழலை ஒழிப்பதில் கடும் சவால்களை சந்தித்து வருகிறது. ஊழல் என்பது சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இந்த நிலையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழலுக்கு எதிராகப் போராட அல்பேனிய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவின் மூலம், அல்பேனியா, ஊழலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran