Amir Khan: பாலிவுடில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அமீர்கான். கோலிவுட்டில் கமலை போல பாலிவுட்டில் அமீர்கான் பல பரிசோதனை முயற்சிகளையும் புதுப்புது கதாபாத்திரங்களையும் தேடிப் பிடித்து நடிப்பவர். கமலை போலவே சினிமாவின் தரத்தையும் ரசிகர்களின் ரசனையும் உயர்த்த வேண்டும் என்கிற முனைப்பில் ஈடுபட்டு வருபவர். இவரின் லகான், பிகே உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கிய கூலி படத்தில் அமீர்கானை ஒரு கேமியோ வேடத்தில் நடிக்க வைத்திருந்தார். விக்ரம் படத்தில் ரோலக்ஸாக வந்த சூர்யாவின் ரோல் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே, அதேபோல அமீர்கான் வேடமும் பேசப்படும் என நினைத்து கூலி படத்தில் அவரை நடிக்கவைத்தார். ஆனால் ரஜினிக்கு பீடி பற்றவைக்கும் வேடம்தான் அமீர்கானுக்கு கிடைத்தது. இதை பார்த்த ரசிகர்கள் ‘ரஜினிக்கு பீடி பத்த வைக்கதான் இவர கூட்டிட்டு வந்தீங்களா’ என பங்கமாக ட்ரோல் செய்தார்கள்.
துவக்கத்தில் ‘நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். இந்த படத்திற்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. அவரோடு நடித்தது எனக்கு பெரிய சந்தோஷம். பெருமையும் கூட’ என சொல்லி வந்த அமீர்கான் தற்போது உண்மையை உடைத்து பேசியிருக்கிறார். ‘கூலி படத்தில் நடித்த தப்பு பண்ணிட்டேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னவென எனக்கே தெரியாது. இனிமே வருங்காலத்தில் இந்த மாதிரி வேடங்களில் நடிக்க மாட்டேன். என்ன வச்சு லோகேஷ் காமெடி பண்ணிட்டார்’ எனக்கான கதாபாத்திரத்தை அவர் சரியாக எழுதவில்லை’ என பொங்கி இருக்கிறார் அமீர்கான்.
விஜயை வைத்து எடுத்த லியோ படத்தில் சஞ்சய் தத்தை வீணடித்திருந்தார் லோகேஷ். ஒரு மேடையில் ‘லோகேஷ் என்னை வீணடித்து விட்டார்’ என சஞ்சய் தத் பேசியிருந்தார். தற்போது அது போலவே அமீர்கானும் பேசியிருக்கிறார். ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் அமீர்கான் ஹீரோவாக நடிக்கும் ஒரு படம் பேசப்பட்ட நிலையில் கூலி ரிசல்ட்டால் அதற்கு வாய்ப்பு இல்லை என செய்திகள் வெளியான நிலையில், இப்போது அமீர்கான் சொல்லி இருப்பதை பார்த்தால் அமீர்கானும் லோகேஷும் எதிர்காலத்தில் இணைந்து படம் செய்யும் வாய்ப்பு இல்லை என்றுதான் கணிக்கப்படுகிறது.