Ashes: "ஆஷஸ் சீரிஸ்ல ரூட் இத பண்லனா மெல்போர்ன் கிரவுண்டுல இத செய்யுறேன்..!" - சவால் விட்ட ஹைடன்
Vikatan September 13, 2025 04:48 PM

கிரிக்கெட் பரிணாம வளர்ச்சி டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பித்து 60 ஓவர் ஒருநாள் போட்டி, 50 ஓவர் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி, 10 ஓவர் போட்டி, 100 பந்துகள் போட்டி என எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.

ஆனாலும், டெஸ்ட் கிரிக்கெட்டின் லெகஸி காலப் போக்கில் கரைந்துவிடாமல், ரசிகர்கள் மத்தியில் இன்றும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ஃபார்மெட்டாக உயர்ப்புடன் வைத்திருக்கும் முதன்மையான தொடர் ஆஷஸ்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கிடையே நூற்றாண்டைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் இந்த ஆஷஸ் தொடர் வரும் நவம்பர் 21 முதல் ஜனவரி 8 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது.

Ashes - ஆஷஸ்

கடைசியாக 2010-11ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி அதன்பிறகு ஒரு ஆஷஸ் தொடரைக்கூட வெல்லவில்லை.

மேலும், 2015-க்குப் பிறகு ஆஷஸ் தொடரையே இங்கிலாந்து வெல்லவில்லை. மறுபக்கம் 2017-18 முதல் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா வசம்தான் இருக்கிறது.

இந்த நிலையில், தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பகிரங்க சவால் ஒன்றை விடுத்திருக்கிறார்.

'ஆல் ஓவர் பார் தி கிரிக்கெட்' யூடியூப் சேனலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியமேத்யூ ஹைடன், "இந்த சம்மரில் ரூட் சதமடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் மைதானத்தை நான் நிர்வாணமாகச் சுற்றி வருகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

மேத்யூ ஹைடன் - Matthew Hayden

மேத்யூ ஹைடனின் இந்த சவால் சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அவ்வாறு சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவு ஒன்றில் மேத்யூ ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன், "தயவு செய்து சதமடித்துவிடுங்கள் ரூட்" என ஜாலியாக கமெண்ட் செய்திருப்பதும் வைரலாகி வருகிறது.

joe root - ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் இருப்பவரும், அவரின் 15,921 டெஸ்ட் ரன்கள் என்ற சாதனையை முறியடிக்கக்கூடிய வாய்ப்புக்கு அருகில் இருப்பவருமான ஜோ ரூட் (13,543 டெஸ்ட் ரன்கள்) தனது டெஸ்ட் கரியரில் ஆஸ்திரேலியாவில் ஒரு சதம் கூட அடித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Joe Root: சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பது சாத்தியமா? எண்களை வைத்து ஓர் அலசல்!
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.