கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாட்டுவண்டிகள் முக்கியமான போக்குவரத்து சாதனமாக பயன்படுத்தப்பட்டு வந்தன.
பொருட்கள் ஏற்றிச் செல்வது முதல் திருமண ஊர்வலங்கள் வரை அனைத்திலும் மாட்டுவண்டிகள் பங்காற்றின. காலப்போக்கில் அவை மறைந்து போனாலும், இன்னும் சிலர் பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டுவண்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், இளைஞர்களில் சிலர் தங்கள் திருமணத்தில் பாரம்பரியத்தை நினைவுகூரும் விதமாக மாட்டுவண்டியில் பயணம் செய்வதையும் விரும்புகிறார்கள்.
அதற்குச் சிறந்த உதாரணமாக, பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையத்தைச் சேர்ந்த சிவப்பிரகாஷ், கோவையைச் சேர்ந்த காவியாவுடன் கரட்டு மடத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தவுடன், புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் அமர்ந்து 5 கிலோமீட்டர் தூரம் தனது பூர்வீக ஊரான அர்த்தநாரிபாளையம் சென்றனர்.
மணமகனே மாட்டுவண்டியை ஓட்டி அழைத்துச் சென்ற இந்த காட்சி வழிப்போக்கர்களை ஆச்சரியப்படுத்தியது. புதுமண தம்பதியினர் பாரம்பரியத்தை காப்பாற்றிய விதம் சமூக ஊடகங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.