Gandhi Kannadi: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் எல்லோரிடமும் பிரபலமானவர் பாலா. இந்த நிகழ்ச்சிக்கு பின் அவரை KPY பாலா என எல்லோரும் அழைக்க துவங்கினார்கள். அந்த நிகழ்ச்சி மட்டுமல்ல. குக் வித் கோமளி உள்ளிட்ட விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளிலும் பாலாவின் பங்களிப்பு இருந்தது. அவருக்கு சம்பந்தமே இல்லாத, இசை தொடர்பான நிகழ்ச்சிகளில் கூட பாலா உள்ளே வந்து எதையாவது செய்து எல்லோரையும் சிரிக்க வைத்து விடுவார் அவரை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு விஜய் டிவி பயன்படுத்தியது.
பாலா, ராமர், மதுரை முத்து இவர்கள் மூவரும் விஜய் டிவியின் முக்கிய சொத்து என்றே சொல்லலாம்.
விஜய் டிவியின் 90 சதவீத நிகழ்ச்சிகளில் இவர்களில் யாரேனும் இருவர் இருப்பார்கள். அல்லது எல்லோரும் இருப்பார்கள். விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோதே திரைப்படங்களில் சின்ன சின்ன வருடங்களில் நடித்தார் பாலா.
மேலும் பல மாவட்டங்களுக்கும் சென்று கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்தார். அப்படி டிவி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சம்பாதித்த பணத்தில் 95 சதவீதம் அவர் மக்களுக்கு உதவி செய்கிறார். ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, ஆட்டோ, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், ஒருவரின் வாழ்வாதாரத்துக்கு உதவுவது, மருத்துவ செலவுக்கு உதவுவது என பாலா செய்யும் உதவிகள் ஏராளம்.
இதனாலேயே மக்களிடம் பாலாவின் மீது நல்ல எண்ணமும் அன்பும் இருக்கிறது. அப்படிப்பட்ட பாலா காந்தி கண்ணாடி என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பாலாவுக்காகவே பலரும் சென்று பார்க்கிறார்கள். அதேநேரம் பாலா ஒரு பெரிய நடிகர் இல்லை என்பதால் எதிர்பார்த்த வசூலை படம் பெறவில்லை. அதோடு தனக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து பாலா நடித்திருக்கலாம் என்கிற விமர்சனமும் வந்தது.
விஜய் டிவியில் பலராலும் பார்க்கப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல திரைப்படங்களுக்கு பிரமோஷன் செய்யப்படுகிறது. இந்நிலையில் பாலா நடித்த காந்தி கண்ணாடி படத்திற்கு மட்டும் விஜய் டிவி புரோமோஷன் செய்ய அனுமதி மறுத்திருக்கிறது. அதற்கு காரணம் விஜய் டிவி நிர்வாகம் கேட்ட பெரிய தொகையை காந்தி கண்ணாடி பட தயாரிப்பாளரால் கொடுக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. விஜய் டிவியில் அவ்வளவு வருடங்கள் வேலை செய்து பல நிகழ்ச்சிகளும் அதிக டிஆர்பி பெற உதவியவர் என்கிற முறையில் பாலாவுக்கு விஜய் டிவி இந்த உதவியை செய்திருக்கலாம் என பலரும் பேசத் தொடங்கி விட்டனர்.