மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி அருகே பொதுமக்களிடையே பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “அதிமுக கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. நமது கூட்டணி வெற்றிக் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திருப்பூர் மாநகராட்சியில் 40 நாட்களாக முறையாக குப்பை அள்ளவில்லை. மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியவில்லை. 5 முறை வெளிநாடு சென்றும் எந்த பயனும் இல்லை. ஏட்டளவில் மட்டுமே உள்ளது. அமெரிக்க வரி விதிப்பு காரணமாக பின்னலாடை பனியன் தொழில் 50 சதவீதம் நலிவடைந்து விட்டது. தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இங்கு தொழிலை சரி செய்ய முதல்வர் என்ன செய்தார். மத்திய அரசை தொடர்பு கொண்டு இதற்கு ஒரு தீர்வு கண்டிருக்க வேண்டும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு குரல் கொடுத்திருக்க வேண்டும். இங்கு இருக்கும் தொழில் செய்யமுடியாமல் இருக்கும் போது வெளி நாட்டில் சென்று முதலீடு ஈர்ப்பதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
இந்த பகுதி தொழில் நிறைந்த பகுதி இது சிறப்பாக செயல்பட்டால் தான் இங்கு உள்ள மக்கள் மட்டும் அல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களும் வளர்ச்சி அடைய முடியும். இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு உங்களை வீழ்த்துவதற்கு அவர்களுடைய ஓட்டை பயன்படுத்துவார்கள்” என தெரிவித்தார்.