கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பய்யாவூர் கிராம பஞ்சாயத்து, இளைஞர்களுக்கு திருமணம் செய்துவைக்க ஒரு மாபெரும் மக்கள் திருமண சுயம்வரம் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஆனால், இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆண்களிடமிருந்து அதிக அளவிலும், பெண்களிடமிருந்து மிக குறைந்த அளவிலும் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
"பய்யாவூர் மாங்கல்யம்" எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டம், திருமணம் செய்து கொள்ள விரும்பும் அனைத்து சாதி, மதத்தை சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் பதிவு செய்ய அழைப்பு விடுத்தது. விண்ணப்பங்கள் தொடங்கிய நாள் முதல், ஏறத்தாழ 3000-க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஆனால், பெண்களின் எண்ணிக்கை சுமார் 200 மட்டுமே.
ஆண் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், பஞ்சாயத்து அதிகாரிகள் ஆண்களுக்கான பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அதேநேரம், பெண்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். அண்டை மாவட்டங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,
இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் மணமக்கள் திருமணம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார்.
Edited by Siva