தமிழ்நாடு முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 7 கோடி மக்கள் ரேஷன் கடைகளின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். உணவுப் பொருட்கள், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல அரசு நலத்திட்டங்களுக்கான அடிப்படையான ஆவணமாக ரேஷன் அட்டை பயன்படுகிறது.
இதுவரை ரேஷன் அட்டை இல்லாதவர்கள் புதிய ரேஷன் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றாலும், சில சமயங்களில் அதிகாரிகள் நிராகரிப்பதால் பொதுமக்கள் சிக்கலில் சிக்குகிறார்கள். இந்தச் சூழலில், ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்ய விரும்பும் மக்களுக்காக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் திருத்த முகாம் நடத்தி வருகிறது.
இந்த மாதத்திற்கான ரேஷன் அட்டை திருத்த முகாம், செப்டம்பர் 13ம் தேதி சனிக்கிழமையில் நடைபெறுகிறது. முகவரி மாற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை, பெயர் நீக்கம், தொலைபேசி எண் திருத்தம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், நகல் அட்டை கோருதல் மற்றும் அட்டை வகை மாற்றம் செய்ய விரும்பும் அனைத்து குடும்பங்களும் இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது.
அனைத்து மாவட்டங்களின் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இந்த முகாம் நடைபெற உள்ளது. ஒரே நாளில் தங்களது விண்ணப்பங்களை நேரில் சென்று சரிசெய்யலாம் என பொதுவிநியோகத்துறை அறிவுறுத்தியுள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு ரேஷன் அட்டை அவசியமான ஆவணமாக இருப்பதால், புதிய ரேஷன் அட்டைக்கு இப்போது விண்ணப்பிக்க இது சிறந்த சந்தர்ப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.