கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த ஷாஜி என்பவரது மனைவி மினி (வயது 42), மகளை ரெயிலில் ஏற்றிவிட வந்த போது தவறி விழுந்து ரெயிலுக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் கண்முன் நடந்த இந்த துயர சம்பவம் ரெயில் நிலையத்தில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஷாஜி – மினி தம்பதியின் மகள் நிமிஷா, சேலத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை பெற்றிருந்த நிமிஷா, சொந்த ஊரான கொட்டாரக்கரைக்கு வந்திருந்தார். இந்நிலையில், விடுமுறைக்குப் பிறகு மீண்டும் சேலத்துக்குச் செல்லும் நிமிஷாவை வழியனுப்ப மினி மற்றும் ஷாஜி இருவரும் நேற்று முன்தினம் மாலை கொட்டாரக்கரை ரெயில்வே நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது ரெயில் வந்ததும், மகளின் பயணச் சாமான்களை வைக்க மினி ரெயிலில் ஏறினார். பொருட்களை வைக்கும்போதே ரெயில் திடீரென புறப்பட்டதால், மினி அதிர்ச்சியடைந்து ஓடும் ரெயிலிலிருந்து இறங்க முயன்றார். ஆனால் தவறி விழுந்த மினி, ரெயிலுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த அசம்பாவிதம் கணவர் ஷாஜி கண்முன் நிகழ்ந்ததால், அவர் அதிர்ச்சியில் திணறினார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ரெயில்வே போலீசார், மினியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கொட்டாரக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாரக்கரை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம், ரெயில் நிலையத்தில் இருந்த அனைவரிடமும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.