வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உலக நாடுகளின் மக்களுக்கு எப்போதும் ஆச்சர்யம்தான். முரட்டு சர்வாதிகாரியாக மேற்கத்திய நாடுகளால் அறியப்படும் கிம், இரும்புத்திரையிட்டு வட கொரியாவை ஆட்சி செய்கிறார். சமீபத்தில் அவர் சீனா வந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் சந்திப்புகள் நடத்திச் சென்றது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சந்திப்புகளில் பேசப்பட்ட விஷயங்களைத் தாண்டி, கிம்மின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகள்தான் வியப்பு தந்தன. அதிநவீன ரக விமானங்களில் பயணம் செய்யும் உலகத் தலைவர்களுக்கு மத்தியில், இன்னமும் பழைய ரயில் ஒன்றில் பயணித்து சீனாவுக்குக் கிம் வந்ததும் வியப்பை ஏற்படுத்தியது. ஏன் இதெல்லாம்?
கிம்மின் தாத்தா காலத்திலிருந்து வட கொரியாவை ஆட்சி செய்வது அவர்கள் குடும்பம்தான். காலம் காலமாக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்திருப்பதால், வட கொரியாவிடம் நவீன விமானங்கள் எதுவும் இல்லை. வட கொரியாவின் விமான நிறுவனமான Air Koryo வசமிருப்பது ஆறு விமானங்கள் மட்டுமே! ரஷ்யத் தயாரிப்புகளான அவை மிகவும் பழைமையானவை. அதிபர் பயணிப்பதற்காக என்று இருக்கும் ஜெட் விமானமும் பாதுகாப்பில்லை என்று கிம் கருதுகிறார். பல நாட்டுத் தலைவர்களும் அதிநவீன விமானங்களில் வந்து இறங்கும் ஒரு நிகழ்வுக்கு அரதப்பழசான விமானத்தில் வந்து இறங்குவது தனக்கு மரியாதைக் குறைவு என்று கிம் நினைப்பதால் இப்படிப்பட்ட விமானப் பயணங்களைத் தவிர்க்கவே அவர் விரும்புகிறார். அமெரிக்காவையே மிரட்டும் அளவுக்கு ஏவுகணைகளை ஏவும் ஒரு நாடு நவீன விமானங்களை வைத்திருக்காதது ஆச்சர்ய முரண்.
வட கொரியத் தலைநகர் பியோங்யாங் நகரிலிருந்து இரண்டு மணி நேரத்தில் விமானத்தில் போய்விட முடிகிற சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு ரயிலில் 20 மணி நேரம் பயணம் செய்து போனார் கிம். ‘சன் டிரெயின்' என்று பெயரிடப்பட்ட இந்தச் சிறப்பு ரயில் ‘நடமாடும் கோட்டை' எனக் கருதப்படுகிறது. குண்டு துளைக்காத அளவுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது இது. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயிலைத் தனது நடமாடும் அலுவலகமாகவே பயன்படுத்துகிறார் கிம். வட கொரியாவுக்குள் எங்கு செல்வதென்றாலும் இந்த ரயிலில்தான் செல்வார் அவர். முன்பு ஒருமுறை சீனா போனபோதும், அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க 2019-ம் ஆண்டு வியட்நாம் சென்றபோதும் இந்த ரயிலில்தான் அவர் சென்றார்.
இந்த ரயிலில் இருந்தபடி கிம், வட கொரிய அதிகாரிகளுடன் பேச தகவல்தொடர்பு வசதிகள் உள்ளன. கிம்மின் பாதுகாப்புப் படையினர் ரயிலில் இருப்பார்கள். அவர் மீட்டிங்குகள் நடத்த, ஓய்வெடுக்க தனித்தனி கேபின்கள் உண்டு. ரயிலில் இருந்து இறங்கியபின் கிம் தனது பயணங்களுக்காகப் பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார்களும் இந்த ரயிலில் உடன் செல்லும்.
எல்லாவற்றையும்விட முக்கியமானது, இதில் இருக்கும் குளியலறை மற்றும் கழிவறை. ஒரு தலைவரின் உடல்நிலை, அவரது பழக்கங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள பகை நாடுகள் பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தும். மரபணுப் பரிசோதனை அவற்றில் முக்கியமானது. கிம்மின் தலைமுடி, வியர்வை, எச்சில், கழிவுகள் என்று ஏதேனும் ஒன்று கிடைத்தாலும் அதை வைத்துப் பரிசோதனைகள் நடத்தி அவரைப் பற்றி நிறைய அறிந்துகொள்ள முடியும். கிம் அதற்கு இடம்கொடுக்காதபடி இந்த ரயிலில் இருக்கும் கழிவறையையே எப்போதும் பயன்படுத்துவார். அவரது பாதுகாப்புக் குழுவினர் எந்தத் தடயமும் வெளியில் செல்லாதபடி அழித்துவிடுவார்கள்.
வெளிநாட்டுப் பயணங்களிலும் இந்த விஷயத்தில் அவர் கவனமாக இருப்பார். கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரலில் அமெரிக்காவின் முயற்சியில் வட கொரிய மற்றும் தென் கொரிய அதிபர்கள் சந்தித்துக்கொண்டனர். கொரிய அமைதிக்காக நிகழ்ந்த இந்த சந்திப்புக்கு கிம் தென் கொரியா சென்றார். அப்போது அவர் பயன்படுத்துவதற்காக ஒரு நடமாடும் கழிப்பறை தனியாக எடுத்துச் செல்லப்பட்டது.
அதே ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் ட்ரம்ப்பை சந்தித்தார் கிம். அதிபர் பதவியேற்றபிறகு அவர் தொலைதூரப் பயணம் சென்றது முதல்முறையாக அப்போதுதான். சீனாவின் ஏர் சீனா நிறுவனம் அவருக்காக அனுப்பிவைத்த போயிங் 747 விமானத்தில் சென்றார். சீனத் தலைவர்கள் பயன்படுத்தும் உயர் ரக விமானத்தை அவர் பயன்பாட்டுக்காக அந்த நாடு அனுப்பிவைத்தது. கிம் சாப்பிடுவதற்கான உணவுகள், அவர் பயன்படுத்தும் பொருள்கள் ஆகியவை வட கொரியாவிலிருந்து தனியாக ஒரு சரக்கு விமானத்தில் சென்றன. சிங்கப்பூரின் செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் கிம் தங்கியிருந்தார். ட்ரம்ப்புடனான சந்திப்பு முடிந்து கிம் அங்கிருந்து கிளம்பியபிறகு வடகொரியப் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு நாள்கள் அந்த அறையிலிருந்து ஒற்றைத் தலைமுடிகூட மிச்சம் இல்லாதபடி எல்லாவற்றையும் அழித்துவிட்டு, கிம் தொடர்பான பயோமெட்ரிக் தடயங்கள் எதுவும் அங்கு இல்லாதபடி சுத்தம் செய்தபிறகே ஹோட்டல் நிர்வாகத்திடம் அந்த அறையைத் திருப்பிக் கொடுத்தனர்.
கிம் தன் பாதுகாப்பு விஷயத்தில் எந்த அளவு கவனமாக இருக்கிறார் என்பதற்கு ஒரு சம்பவம் உதாரணம். 2019-ம் ஆண்டு அவர் வியட்நாம் செல்லும்போது இடையில் சீனாவில் நான்னிங் என்ற ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து இறங்கி, சில நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்தார். அப்போது அவர் ஒரு சிகரெட் புகைத்தார். அதைப் பற்றவைத்த தீக்குச்சியைத் திரும்பவும் கவனமாகத் தன் தீப்பெட்டியிலேயே வைத்துக்கொண்டார். அவரின் தங்கை ஒரு ஆஷ்ட்ரேவுடன் எதிரே வந்து நின்றார். சாம்பலையும், கிம்மின் எச்சில் பட்ட சிகரெட்டின் அடிப்புறத்தையும் அதில் சேகரித்துக்கொண்டே அவர் சென்றார். ரயில் நிலையத்தில் எதையும் மிச்சம் வைக்கவில்லை.
இப்போதும் சீனாவில் இதேபோல நடந்தது. ரஷ்ய அதிபர் புதினும் கிம்மும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினர். இந்த சந்திப்பு முடிந்ததும் வட கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் கவனமாக அந்த அறையை சோதித்து, கிம் உட்கார்ந்த நாற்காலி, அவர் கையால் தொட்ட டேபிள் என எல்லாவற்றையும் கவனமாகத் துடைத்து, அங்கிருந்த தடயங்களை அழித்தனர். அவர் தண்ணீர் குடித்த டம்ளரில் உதடு பட்டிருக்கும் என்பதால், அதையும் பத்திரமாக எடுத்துப் போய்விட்டனர்.
சர்வதேசத் தலைவர்களை கிம் சந்திக்கும்போது இன்னொரு விஷயத்திலும் கவனமாக இருக்கிறார். ஏதேனும் ஒப்பந்தங்கள் என்றால், டேபிளில் வைக்கப்பட்டிருக்கும் பேனாவை எடுத்துக் கையெழுத்து போடுவதில்லை. தன் பாதுகாப்பு அதிகாரிகள் கொடுக்கும் பேனாக்களையே பயன்படுத்துகிறார். கைரேகை, வியர்வை என எதுவும் பதிந்துவிடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம். ட்ரம்புடன் இரண்டு முறை சந்திப்புகளில் கைகுலுக்கியிருக்கிறார் கிம். ட்ரம்பின் கைகளை மட்டும்தான் துடைக்கவில்லை கிம்மின் பாதுகாவலர்கள். மற்றபடி எல்லாவற்றையும் துடைத்து அழித்துவிட்டனர்.
துப்பாக்கிகள், ஏவுகணைகள் மட்டுமன்றி ரசாயனப் பொடிகள் அல்லது வாயுக்கள் மூலமும் கிம்மை வீழ்த்தத் தாக்குதல்கள் நடக்கலாம் என அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் அஞ்சுகின்றனர். அதனால், கிம் வருவதற்கு முன்பாகவே அந்த இடத்துக்கு வரும் அதிகாரிகள், அவர் அமர இருக்கும் நாற்காலியில் தொடங்கி எல்லாவற்றையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வார்கள். அதேபோல நச்சுக்கொல்லி ஸ்ப்ரேவும் தெளித்து அறையைத் தூய்மை செய்வார்கள். அதன்பிறகே கிம் வருவார்.
நட்பு நாடுகளுக்குச் சென்றால்கூட இந்த விஷயத்தில் கிம் சமரசம் செய்துகொள்வதில்லை. ரஷ்ய அதிபர் புதினும் இதில் முக்கால்வாசி விஷயங்களைத் தன் பாதுகாப்புக்காகச் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.