திருவள்ளூர் மாவட்டத்தில் செல்போன் வாங்குவது தொடர்பான தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட இளைஞரின் 3 நண்பர்களை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் அருகேயுள்ள பாழடைந்த கட்டிடத்திலிருந்து அழுகிய துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பாழடைந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் இளைஞர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்று தெரிய வந்தது.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் சங்கர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சங்கரின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் அதன்படி புலன் விசாரணையில் இறங்கினர். மேலும் சங்கர் கொலை செய்யப்படுவதற்கு முன் கடைசியாக ஜெய்சிவா என்ற இளைஞருடன் பேசியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஜெய்சிவா எண்ணிற்கு காவல்துறையினர் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவரது செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதன் பிறகு தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறை ஜெய்சிவா மற்றும் 2 இளைஞர்களை கைது செய்தனர்.
இதையும் படிங்க: மது குடிப்பதில் தகராறு... ஏமானாக மாறிய நண்பர்கள்.!! இளைஞர் படுகொலை.!!
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் செல்போன் வாங்குவது தொடர்பான தகராறில் சங்கர் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். ஜெய்சிவா குறைந்த செலவில் செல்போன் வாங்க வேண்டும் என சங்கரிடம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனக்குத் தெரிந்த கடையில் 10,000 ரூபாய்க்கு நல்ல செல்போன் கிடைக்கும் என சங்கர் தெரிவித்துள்ளார். இதற்காக ஜெய்சிவா, சங்கரிடம் 5,000 ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் மீதி பணத்தை கொடுக்காமல் சங்கரிடம் செல்போன் கேட்டு தொல்லை செய்திருக்கிறார் ஜெய்சிவா.
இது தொடர்பாக இருவரிடையே பிரச்சனை நடைபெற்று வந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மது அருந்துவதற்காக நண்பர்கள் 4 பேரும் பாழடைந்த கட்டிடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ஜெய்சிவா மற்றும் சங்கரிடையே செல்போன் குறித்த பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜெய்சிவா, கைலாஷ் மற்றும் சுமன் ஆகிய 3 பேர் சேர்ந்து சங்கரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: வேலை தேடிச் சென்ற இளைஞர் படுகொலை... பணத்திற்காக வெறி செயல்.!! 3 பேர் கைது.!!