காட்டில் உயிர் வாழ்வதற்கு வலிமையானவை பலவீனமானவற்றை வேட்டையாடுவது இயற்கையின் விதி. ஆனால், ஒரு பாம்பு மானை வேட்டையாடி, அதை விழுங்க முயன்றபோது, வனத்துறையினர் தலையிட்டு அந்த மானை மீட்ட சம்பவத்தை பதிவு செய்யும் 23 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ X தளத்தில் கடந்த செப்டம்பர் 12, 2025 அன்று பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, கருத்துப் பகுதியில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பு மானை தனது பிடியில் இறுக்கி, மூச்சுத் திணற வைத்து, விழுங்கத் தயாராக இருந்தபோது, வனத்துறையினர் தலையிட்டு மானை விடுவித்து, பின்னர் அதை புதைத்தனர். இது இயற்கையின் விதியில் தலையிடுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள காலாகர் காட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. வீடியோவில், பாம்பு மானை இறுக்கமாக பிடித்து, அதனை கொன்றது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், மான் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், வனத்துறையினர் அதை பாம்பிடமிருந்து பிரித்து, புதைத்துவிட்டனர்.
இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். “மானை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை, ஆனால் பாம்பின் உணவை பறித்தது ஏன்?” என்று ஒரு பயனர் விமர்சித்துள்ளார். “வனத்துறையின் இந்த செயல் இயற்கையின் நியதிக்கு எதிரானது” என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். இயற்கை விதிகளில் மனிதர்கள் தலையிடுவது சரியா, தவறா என்ற கேள்வி இந்த வீடியோவைப் பார்த்த பலரிடையே தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளது.