67ல் நடந்த மந்திரத்தை மீண்டும் நடத்தி காட்டுவோம்: அண்ணா பிறந்த நாளில் விஜய் அறிக்கை..!
WEBDUNIA TAMIL September 16, 2025 10:48 AM

இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "மாநில உரிமைக்காக ஓங்கி குரல் எழுப்பியவர், இருமொழிக் கொள்கையை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர், 'தமிழ்நாடு' என்று சட்டப்படி பெயர் மாற்றியவர்" என்று அண்ணாவின் பங்களிப்புகளை விஜய் புகழ்ந்துள்ளார்.

மேலும், "சமூக நீதிக் கொள்கையை கொண்டிருந்தவர், சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியவர், குடும்ப ஆதிக்கம் அற்ற அற்புதமான அரசியல் தலைவர், கொள்கை வழியில் நின்றவர், இரட்டை வேடம் போடாமல் மக்களுக்காக உண்மையாக உழைத்தவர்" என்றும் அண்ணாவை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாவின் அரசியல் மந்திரமான "மக்களிடம் செல்" என்பதை பின்பற்றி, 1967 தேர்தலில் அண்ணா மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்திற்கு வழிவகை செய்தது போல், மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் நிகழ்த்தி காட்ட உறுதி கொள்வோம் என விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.