தல அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல பிரபலமாக நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.
படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.படம் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தின் வெற்றியில் மிக முக்கியமாக பார்க்கப்பட்ட விஷயங்களில் இசைஞானி இளையராஜா இசையமைத்த சில பாடல்களின் ரீமிக்ஸ் வெர்ஷன்கள் பயன்படுத்தப்பட்டதுதான்.
அதிலும் குறிப்பாக, 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடல் படும் வைரலானது. மற்றும் 'பஞ்சுமிட்டாய் சேலைக்கட்டி' பாடல், இளமை இதோ இதோ' பாடல் என்ற மூன்று பாடல்களுமே மீண்டும் இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா ரூ. 05 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பினார். பாடல்களின் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றுவிட்டதாக ‘குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
தொடர்ந்து, 'குட் பேட் அக்லி' படத்தில் பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தன்னுடைய பாடல்களை பயன்படுத்துவதை நிறுத்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என 'குட் பேட் அக்லி' படத் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அத்துடன், பாடல்களை நீக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த ஏற்கனவே உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தது. இளையராஜாவின் இசையில் ஏற்கனவே வெளியான திரைப்படத்தில் உள்ள 03 பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.