தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (எபிஎஸ்) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பில் அவர் உடன் சென்றிருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளை வெளியேற்றிவிட்டு, அமித்ஷாவுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியது தற்போது அதிமுக வட்டாரத்தில் கடும் சலசலப்பை கிளப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. சில மாதங்களுக்கு முன்னர் அமைதியாக இருந்த அதிமுகவில் தற்போது மீண்டும் சிக்கல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், எபிஎஸின் தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்டவர். ஆனால் சமீபத்தில் அவர் திடீரென பழனிசாமிக்கு எதிராகக் குரல் எழுப்பி, “கட்சியை விட்டு பிரிந்த மூத்த தலைவர்களை மீண்டும் இணைக்க வேண்டும்; இல்லையெனில், நான் நேரடியாக இணைப்பு பணியை மேற்கொள்கிறேன்” என்று எச்சரித்தார். இதற்கு 10 நாட்கள் அவகாசமும் வழங்கினார்.
ஆனால் அடுத்த நாளே, அவரின் அனைத்து கட்சிப் பொறுப்புகளும் நீக்கப்பட்டன. இதையடுத்து, செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் முறையிட்டார்.
இதற்கிடையில், குடியரசுத் துணைத் தலைவர் கே.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க டெல்லி பயணம் மேற்கொண்டார் என அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டாலும், உண்மையான நோக்கம் அமித்ஷாவுடன் அரசியல் ஆலோசனை நடத்துவதே என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தப் பயணத்தில் எபிஎஸுடன், சிவி சண்முகம், வேலுமணி, முனுசாமி, இன்பதுரை, தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் சென்றிருந்தனர்.
தொடக்கத்தில், மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து அமித்ஷாவை சந்தித்த எபிஎஸ், சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில், திடீரென மூத்த நிர்வாகிகளை வெளியேற்றிவிட்டு, தனிப்பட்ட முறையில் அமித்ஷாவுடன் 40 நிமிடங்கள் ரகசிய ஆலோசனை மேற்கொண்டார்.
மூத்த நிர்வாகிகள் அனைவரும் எபிஎஸின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் புறப்பட்டு சென்று, எபிஎஸும் தங்களுடன் சென்றுவிட்டதாக நினைத்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குள், பழனிசாமி மறுபடியும் அமித்ஷாவுடன் தனியாகச் சந்தித்து பேசியது பின்னர் தெரியவந்துள்ளது.
எபிஎஸ் இவ்வாறு, உடன் சென்ற மூத்த நிர்வாகிகளை நம்பிக்கை இல்லாமல் வெளியேற்றிவிட்டு தனிப்பட்ட முறையில் அமித்ஷாவுடன் ஆலோசனை செய்த சம்பவம், அதிமுக நிர்வாகிகளுக்குள் அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரகசிய சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வராதபோதிலும், செங்கோட்டையன் பிரச்னை, அதிமுகபாஜக கூட்டணி நிலை, 2026 தேர்தல் வியூகங்கள் ஆகியவை ஆலோசனையின் மையமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.