அது எப்படி..? ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள்; அதிர்ச்சியில் மக்கள்..!!
Top Tamil News September 18, 2025 01:48 AM

குன்னூர் தொகுதியைச் சேர்ந்த கோடேரி என்னும் சிற்றூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குன்னூர் வட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கோடேரி சிற்றூருக்கான இறுதி வாக்காளர் பட்டியலை 12வது வார்டு உறுப்பினர் மனோகரன் ஆய்வு செய்தார். அப்போது அந்தப் பட்டியலில் குறைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதில், குறிப்பிட்ட வாக்குச் சாவடிக்கு உட்பட்டு 12, 17 ஆம் எண் வார்டுகள் மட்டுமே உள்ள நிலையில், 11, 12, 17 வார்டுகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், 9, 10 வார்டுகளின் வாக்காளர்களும் இதில் இடம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், நான்கு வீடுகளைக் கொண்ட வாடகைக் குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டிலும் 9 பேர், 10 பேர், 33 பேர், 79 பேர் என்று பதிவிடப்பட்டிருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளர் பெயர்கள் பல வீடுகளின் எண்களில் குடியிருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்னர், அந்தக் குடியிருப்பில் இருந்து வெளியேறி வெளியூர்களுக்குச் சென்றவர்களின் பெயர்களும் அந்த வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வார்டு உறுப்பினர் மனோகரன் கூறும்போது, “இது போன்ற வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, அரசியல் கட்சியினர் குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது.

818 வாக்காளர்கள் உள்ள இந்த வாக்குச் சாவடியில் வாக்காளர் பட்டியலில் வார்டு வரையறை கூடச் சரிவரச் செய்யாமல் குளறுபடிகள் உள்ளன. இதைத் தேர்தல் அலுவலர்களின் அலட்சியம் என்பதா அல்லது தரவுகளைப் பதிவேற்றியவர்களின் கவனக்குறைவு என்பதா. இந்தத் தவறுகள் சரிசெய்யப்பட்டு சரியான தரவுகள் பதிவிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன், இதை வலியுறுத்தித் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் சொன்னார்.

இந்தப் புகாரை அடுத்து குன்னூர் வட்டாட்சியர் ஜவகர் தலைமையில் அதிகாரிகள் கோடேரி சிற்றூரில் ஆய்வு மேற்கொண்டனர்.

குன்னூர் வட்டாட்சியர் ஜவகர் கூறும்போது, “இங்குள்ள வாக்காளர் பதிவேடு குறித்து ஆய்வு செய்து, அதில் உள்ள குழப்பங்களைத் தீர்க்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.