நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், சமீபத்தில் திருச்சி மக்கள் சந்திப்பின்போது, தி.மு.க.வை விமர்சித்தது போலவே பா.ஜ.க.வையும் விமர்சித்தார். குறிப்பாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டமானது வாக்குத் திருட்டுக்காக பயன்படுத்தப்படும் என்றும், அதன் மூலம் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முயல்கிறது என்றும் அவர் பேசியிருந்தார். விஜய்யின் இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விஜய்யின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த பா.ஜ.க. பிரமுகரும், நடிகையுமான குஷ்பு, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாங்கள் கொண்டு வந்த திட்டமல்ல; இது ஏற்கெனவே நடைமுறையில் இருந்ததுதான். காங்கிரஸ் கட்சி தங்களுடைய வசதிக்காக அதை மாற்றி அமைத்தது. இப்போது மீண்டும் அந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. எனவே, விஜய் அரசியல் வரலாறு தெரிந்துகொண்டு பேச வேண்டும்” என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக-பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெறுமா அல்லது தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெறுமா என்ற கேள்விக்கு, “மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது மக்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று குஷ்பு தெரிவித்தார்.
Edited by Mahendran