தடுப்பூசி போட்டவுடன் 27 கர்ப்பிணிகளுக்கு நடுக்கம்! அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி பின்னணி
Top Tamil News September 19, 2025 11:48 AM

சீர்காழி அரசு மருத்துவமனையில் தடுப்பூசியால் கர்ப்பிணிகள் உட்பட 27 பேருக்கு காய்ச்சல் மற்றும் நடுக்கம் ஏற்பட்ட விவகாரத்தில் தற்போது அனைவரின் உடல் நிலையும் சீராக இருப்பதாக அரசு தலைமை மருத்துவர்  விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அரசு தாய் சேய் நல மையம் இயங்கி வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். இதனிடையே கர்ப்பிணிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்றவர்களுக்கு மருத்துவர்கள் நேற்று இரவு ஊசி போட்ட பிறகு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைவருக்கும் மாற்று மருந்து கொடுத்த நிலையில் அனைவருக்கும் உடல்நிலை சீரானது. இரண்டு பேர் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சீர்காழி அரசு தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். சீர்காழி அரசு மருத்துவமனையில் நேற்று 27 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 20 பிரசவித்த தாய்மார்கள் மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் , அவர்களில் 27 பயனாளிகளுக்கு காலை மற்றும் பிற்பகல் வழக்கமாக கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

மாலை எட்டு முப்பது மணிக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்ட சில மணித்துளிகளில் 27 பயனாளிகளுக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் தகவல் அறிந்து உடனடியாக மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து 27 பயனாளிகளுக்கும் மாற்று மருந்துகளை வழங்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட 9 கர்ப்பிணி தாய்மார்களில் ஒருவருக்கு premature என்பதால் மாற்று மருந்துகள் வழங்கப்பட்டு அருகில் உள்ள கடலூர் அரசு மருத்துவமனை சிதம்பரத்திற்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அனைத்து பயனாளிகளும் நல்ல உடல் தகுதியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் இன்று அதே மருத்துவ குழுவினரால் அனைத்து பயனாளிகளுக்கும் பரிசோதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் இணை இயக்குனர் நலப்பணிகள் அவர்களால் அனைத்து பயனாளிகள் உடல் நலம் மற்றும் சிகிச்சை கேட்டறியப்பட்டதாகவும் தற்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.