காட்டில் ஒரு விசித்திரமான உயிரினம் தென்பட்டு, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் முகம் பாம்பைப் போலவும், வால் சிறியதாகவும், நாக்கு நீல நிறத்திலும் இருப்பதால், இந்த அசாதாரண உயிரினத்தின் வீடியோவைப் பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
சமூக வலைதளமான எக்ஸ்-இல் @TheeDarkCircle என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த 16 வினாடிகள் வீடியோ, 40,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோவில், காட்டில் உலர்ந்த இலைகளின் மேல் அமர்ந்திருக்கும் இந்த உயிரினம், கேமரா நெருங்கியதும் திடீரென தனது நீல நாக்கை வெளியே நீட்டுவதைக் காணலாம். “இது பாம்பா? இல்லை பல்லியின் அரிய வகையா?” என்று நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த ஒருவர், “இது இரவில் தென்பட்டால் மாரடைப்பே வந்துவிடும்!” என்று நகைச்சுவையாகக் கூற, மற்றொருவர், “இயற்கையில் இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் புதைந்திருக்கின்றன, இவற்றைப் பார்க்கும்போது நம்பவே முடியவில்லை!” என்று வியந்தார். இந்த உயிரினம் ‘புளூ-டங் ஸ்கிங்க்’ (Blue-tongued Skink) என்ற பல்லி வகையைச் சேர்ந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும் காணப்படும் இந்தப் பல்லி, தனது பளபளக்கும் நீல நாக்கை ஆபத்து உணரும்போது வெளியே நீட்டி எதிரிகளை அச்சுறுத்துகிறது. தூரத்தில் பாம்பு போலத் தோன்றினாலும், இது குறுகிய வாலும், கனமான உடலும் கொண்ட பல்லியின் ஒரு வகையாகும். இந்த வீடியோ இணையத்தில் தொடர்ந்து பரவி, மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.