உத்தரபிரதேச மாநிலம் பால்யா மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 3ஆம் தேதி, சிகந்தர்பூர் நகரில் உள்ள ஒரு கோச்சிங் வகுப்பிற்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, செப்டம்பர் 9ஆம் தேதி சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், சிகந்தர்பூர் போலீஸ் நிலையத்தில் மர்ம நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த வழக்கை தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். செப்டம்பர் 11 அன்று சிறுமி மீட்கப்பட்ட நிலையில், காவல்துறையிடம் அளித்த தகவலில், கிருஷ்ணா சவுகான் என்ற இளைஞர் தன்னை கடத்தி பெங்களூருவிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கடத்தல் மற்றும் பாலியல் குற்றங்களுக்கான இந்திய புதிய குற்றச் சட்டம் (BNS) பிரிவுகள் மற்றும் குழந்தைகள் பாலியல் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டன.
பின்னர், இரகசிய தகவலின் அடிப்படையில் சிகந்தர்பூர் நகரின் அருகே இருந்து குற்றவாளி கிருஷ்ணா சவுகான் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுத்தி உள்ளது.