வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித் தொகை: பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!
Seithipunal Tamil September 19, 2025 04:48 PM

பீகாரில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். அங்கு வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை உயர்வு, கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு, மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி,வேலையில்லாத பட்டதாரிகளுக்கு உதவித் தொகை என முதல்வர் நிதிஷ் குமார் தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

''பீகாரில் 07 நிச்சய திட்டத்தின் கீழ், முன்னர் செயல்படுத்தப்பட்ட 'முதல்வரின் நிச்சயம் சுயம் சகாயத பட்டா யோஜனா ' திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முன்னர், இந்த திட்டத்தின் கீழ், பத்து மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க முடியாத வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுய உதவித் திட்டத்தின் பலன், தற்போது கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவைச் சேர்ந்த வேலையில்லாத ஆண் மற்றும் பெண் பட்டதாரி இளைஞர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ், 20 முதல் 25 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.வேலையில்லா இளைஞர்கள், பெண்களுக்கு வேலைக்கு தேவையான பயிற்சி பெறவும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும், அதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் இந்த உதவித்தொகை பயனளிக்கும்.'' என்று தெரிவித்துள்ளார்.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.