காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 29 வயது தேவிகா, 10 ஆண்டுகளுக்கு முன் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்தவர். ஒரு குழந்தையும் பெற்ற இவர்களது வாழ்க்கை, கார்த்திக்கின் மது பழக்கத்தால் மூன்று ஆண்டுகளிலேயே சிதைந்தது. குடிப்பழக்கத்தை கைவிடுமாறு தேவிகா வற்புறுத்தியும் பயனின்றி, கணவரை பிரிந்து தனித்து வாழ்ந்தார்.
கடந்த 2020-ல் தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த தேவிகா, அங்கு டிரைவராக பணியாற்றிய சரத்குமாருடன் நட்பு கொண்டார். இந்த நட்பு காதலாக மலர, சரத்குமார் தேவிகாவை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, கோவிலில் திருமணமும் செய்து கொண்டார். ஆனால், இந்த காதல் வாழ்க்கையும் மோசடியில் முடிந்தது.
தேவிகா கர்ப்பமானபோது, சரத்குமார் கருவை கலைக்க கட்டாயப்படுத்தினார். இதனிடையே, ஞாயிறு வரை தேவிகாவுடன் மகிழ்ச்சியாக பேசிய சரத்குமார், மறுநாள் திங்களன்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து அதிர்ச்சி அளித்தார். இதை கேள்விப்பட்டு மனமுடைந்த தேவிகா, சரத்குமாரிடம் விசாரித்தபோது, அவரது குடும்பத்தினர் ஆபாசமாக திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
சரத்குமாருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி ரூ.1 லட்சம் கடனும், 3 பவுன் தங்க நகைகளையும் பறித்ததாகவும் தேவிகா கண்ணீருடன் தெரிவித்தார். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றபோது, உணர்ச்சிவசப்பட்டு மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்த, புகாரை அளித்துவிட்டு சென்றார். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.