நாகை பிரசாரத்திற்கு புறப்பட்டார் விஜய்..!
Top Tamil News September 20, 2025 05:48 PM

நாகையில் இன்று 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார் தவெக தலைவர் விஜய்.

இந்த நிலையில், நாகையில் பிரசாரம் நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். தற்போது சென்னையில் விமான நிலையம் வந்தடைந்துள்ளார். தனி விமானத்தில் திருச்சி செல்கிறார் தவெக தலைவர் விஜய். அங்கிருந்து நாகை மற்றும் திருவாரூரில் சாலை மார்கமாக சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.

மேலும் விஜயை வரவேற்க வாஞ்சி ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே தவெக தொண்டர்கள் குவியத்தொடங்கினர்.

விஜய் பிரசாரம் மேற்கொள்ள கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 7 இடங்களில் அந்த கட்சியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.

இந்த நிலையில் புத்தூர் ரவுண்டானா கிழக்கு கடற்கரை சாலையில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் அந்த பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்வதால் பாதுகாப்பு கருதி அந்த இடத்தை தவிர்த்த தமிழக வெற்றிக் கழகத்தினர் அண்ணா சிலை பகுதியில் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டனர். இதற்கு காவல்துறை போக்குவரத்து காரணங்களை காட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் பிரசார இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது.

இருந்தும் அந்த கட்சியினரின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட போலீசார், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கினர். குறிப்பாக விஜய் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது. பயண வழிப்பாதை மற்றும் பிரசாரம் நடைபெற உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது.

பிற கட்சிகளின் அலுவலகங்கள் இருப்பின், அந்த இடங்களில் தங்கள் கட்சியின் தன்னார்வலர்களை நியமித்து பிரச்சினைகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் ஏற்பட்டால், பொறுப்பேற்க வேண்டும். சிலைகள் இருக்கும் இடங்களில் ஏறக்கூடாது என்பது உள்பட 20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். குறிப்பாக நண்பகல் 12.25 மணி முதல் 1 மணி வரை 35 நிமிடங்கள் மட்டுமே அவர் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் போலீசார் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

நாகை பிரசாரத்திற்காக சென்னையில் இருந்து காரைக்கால் வழியாக வரும் விஜய்க்கு மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து நாகூர், நாகை கலெக்டர் அலுவலகம், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் வழியாக கிழக்கு கடற்கரை சாலை சென்று அங்கிருந்து புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதிக்கு சென்று விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.

நாகையில் பிரசாரத்தை முடித்து விட்டு சிக்கல், கீழ்வேளூர் பைபாஸ் வழியாக திருவாரூர் வரும் விஜய். திருவாரூர் தெற்கு வீதியில் பிரசாரம் செய்கிறார். மதியம் 3 மணி முதல் 5 மணி வரை அவர் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி அளித்து உள்ளனர். திருவாரூரில் பிரசாரம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு விஜய் சென்னை செல்கிறார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.