மதுரை என்றதுமே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கோயில் தான். மதுரை ஊரெங்கும் கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனி தான். ஈசன் தன் திருவிளையாடல்கள் பல நிகழ்த்தியதும் இந்தக் கோயிலைச் சுற்றித்தான். ஓர் ஆண்டில் 274 நாள்கள் திருவிழாக்காணும் தலம் இது. நவகிரகங்களில் புதன் தலம். இங்கு வந்து அன்னையை வழிபாடு செய்தால் திருமண வரம் கைகூடுவதோடு கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. `மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை' என்று சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படும் தலம் இது. இந்த பீடத்துக்கு "ராஜமாதங்கி சியாமள பீடம்" என்றும் பெயர். இங்கு அரசாட்சி செய்யும் அன்னை மீனாட்சிக்கு அபிராமவல்லி, அங்கயற்கண்குமாரி, கற்பூர வல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தர வல்லி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிஷேகவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திரு வழுதி மகள் என பல திருநாமங்களும் உண்டு.
இப்போதும் மதுரை நகரை அன்னை மீனாட்சியே அரசியாக இருந்து ஆட்சி செய்வதாக நம்பிக்கை. அதனால் தான் இங்குள்ள மக்கள் தங்களின் குறைகளை அன்னை மீனாட்சியிடம் சொன்னதும் அவள் உடனடியாக அதை தீர்த்து வைப்பதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.