ஏழரைச் சனியால் அவதியா? - திருக்கொள்ளிக்காடு போய்வந்தால் சனிபகவானையே, `ரொம்ப நல்லவர்' என்பீர்கள்!
Vikatan September 20, 2025 05:48 PM
திருக்கொள்ளிக்காடு

ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகசனி படுத்தும் பாடு அதை அனுபவித்தவர்களிடம் கேட்டால்தான் தெரியும். அதிலும் ஏழரை சனி, வாழ்க்கையையே புரட்டிப்போடும்.

பெரும் நஷ்டம், மன வருத்தம், தேவையற்ற பகை என வாழ்க்கையையே நரகமாக்கிவிடும். அப்படி ஏழரை சனியால் துன்புறுபவர்கள் சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டால் துன்பங்கள் குறையும் என்பது நம்பிக்கை.

ஆனால் ஒரு தலத்துக்குச் சென்று ஒரு முறை வழிபட்டாலே வரும் பிரச்னைகள் குறைந்து மங்கலங்கள் பொங்க ஆரம்பிக்கும் என்கிறார்கள் பக்தர்கள். அப்படி பக்தர்கள் வாழ்வில் மங்கலம் பொங்க வைப்பவர்தான் பொங்கு சனீஸ்வரர்.

பொதுவாக சனி பரிகாரத்தலம் என்றவுடன் அனைவருக்கும் நினைவு வருவது திருநள்ளாறு. அதற்கு இணையான பல தலங்கள் நம் தேசம் முழுவதும் இருந்தாலும் அவற்றுள் மிகவும் முக்கியமானது திருக்கொள்ளிக்காடு.

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் சனி பகவான் என்றால் பயம் கொள்பவர்கள் இங்கே பொங்கு சனி என்று இவரைக் கொண்டாடுகிறார்கள்.தல புராணம்

திருவாரூர் அருகே இருக்கும் இந்தத் தலம் ஈசனின் சாந்நித்தியம் நிறைந்த அற்புதத் தலம். இங்கே ஈசன் அக்னீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அக்னி என்றாலே நெருப்பு என்றுதானே பொருள்.

சுவாமி தீமைகளை பாவங்களைப் பொசுக்கும் நெருப்பின் அம்சமாக இங்கே அருள்பாலிக்கிறார். இந்த சுவாமியை வழிபட்டாலே நம் பாவங்கள் பொசுங்கிப்போகும்.

இந்தத் தலத்தின் புராணம் அற்புதமானது. சனி பகவான் தன் சாபம் நீங்குவதற்காக, இந்தத் தலத்துக்கு வந்து, இங்கேயுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜை செய்தார்.

அவரின் தவத்தில் மகிழ்ந்த சிவனார், தேவியுடன் அவருக்குத் திருக்காட்சி தந்தார். அப்போது, 'தனம் மற்றும் தானியங்களுக்கு அதிபதியாக இருந்து அனைவருக்கும் அடியேன் அருளவேண்டும். குபேர சம்பத்துகளைத் தருபவனாக, ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் அதிபதியாக இருந்து, உயிர்களுக்கு வரமளிக்கவேண்டும்’ என சிவனாரிடம் வரம் கேட்டார் சனி பகவான். 'அப்படியே ஆகட்டும்’ என வரத்தைத் தந்தருளினார் சிவனார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் : பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் சேர்வர் - ஓர் அற்புத சிவாலயம்!

அன்று முதல், திருக்கொள்ளிக்காடு தலத்துக்கு வந்து, தன்னைத் தரிசிக்கிற பக்தர்களுக்கு, சகல செல்வங்களையும் நோய் நொடியில்லாத, நீண்ட ஆரோக்கியத்தையும் வாரி வழங்கி வருகிறார், ஸ்ரீசனீஸ்வரர். இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் - ஸ்ரீஅக்னீஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீமிருதுபாத நாயகி. அதாவது, பஞ்சின் மெல்லடியாள் என்று பொருள்!

பொதுவாக சனி பகவான் என்றால் பயம் கொள்பவர்கள் இங்கே பொங்கு சனி என்று இவரைக் கொண்டாடுகிறார்கள். இந்தத் தலத்தில், ஸ்ரீசனீஸ்வரர், தனிச்சந்நிதியில் அருள்கிறார். எல்லாக் கோயில்களிலும், ஸ்ரீமகாலட்சுமிக்கு சந்நிதி இருக்கும். இங்கே... இந்தத் தலத்தில், லட்சுமி சந்நிதி இருக்கவேண்டிய இடத்தில், சக்தி அம்சமாக, சகல ஐஸ்வரியங்களையும் வாரி வழங்கும் வள்ளலாக, காட்சி தந்து அருள்புரிகிறார் சனி பகவான்! அருகிலேயே திருமகளும் சந்நிதி கொண்டிருப்பது விசேஷம்!

திருக்கொள்ளிக்காடு

இந்தத் தலத்தில் பொங்கு சனீஸ்வரர், கையில் கலப்பையுடன் திருக்காட்சி தந்தருள்கிறார். எனவே, இவரை வணங்கிவிட்டு, விதைப்பது அனைத்துமே பொன்னென விளைந்து, செல்வத்தைத் தரும். வீட்டில், சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் சேரும் என்பது ஐதிகம்.

இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பம்சம்... ஸ்ரீபைரவரும் ஸ்ரீசனீஸ்வரரும் எதிரெதிர் சந்நிதியில் இருந்தபடி, பரஸ்பரம் பார்த்துக் கொள்கின்றனர். சிறப்பான அமைப்பு இது என்கிறார்கள் பக்தர்கள்.

ஸ்ரீகால பைரவரும் எதிரிகள் தொல்லை முதலான அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்து, மன தைரியத்துடன் வாழ்வதற்கு அருள்கிறார். மேலும் பைரவரே சனிபகவானின் குரு. எனவே குருவின் பார்வையில் இருக்கும் சனி நல்லவைகளை மட்டுமே அருள்வார் என்பது விசேஷம்.

இங்கேயுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபஞ்சினும் மெல்லடியாள் சமேத ஸ்ரீஅக்னீஸ்வரரையும் ஸ்ரீசனி பகவானையும் வழிபட, இந்த ஏழரை சனிக் காலம் என்றில்லை. இந்த ஜன்மம் முழுக்கவே சீரும் சிறப்புமாக, சகல செல்வங்களும் பெற்று, பெருவாழ்வு வாழலாம்.

எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனியை தரிசித்து வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.

திருக்கொள்ளிக்காடு சனி

எப்படிச் செல்வது ? திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில், சுமார்16 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்துப்பொடி; வாழைத்தார்
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.