Kalki 2: 8 மணி நேர வேலை, கூடுதல் சம்பளம் கேட்ட தீபிகா படுகோனே படத்திலிருந்து நீக்கம்?
Vikatan September 21, 2025 04:48 AM

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே திடீரென கல்கி 2 படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோனேவிற்கு குழந்தை பிறந்த பிறகு அவர் படப்பிடிப்புக்கு வர பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு தயாரிப்பாளர்களுக்கு அதிக அளவில் செலவு வைப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தீபிகா படுகோனேயை தங்களது படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தற்போது கல்கி 2 படத்தில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டதற்கும் தீபிகா படுகோனே விதித்த நிபந்தனைகள்தான் காரணம் என்று தெரிய வந்து இருக்கிறது. படப்பிடிப்பில் 8 மணி நேரம் மட்டுமே பங்கேற்பேன் என்று தனது முதல் நிபந்தனையை தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட கூடுதலாக 25 சதவீதம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் படப்பிடிப்புக்கு வரும்போது தனக்குத் தங்குவதற்கு பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்

இந்தக் கோரிக்கை குறித்து தீபிகா படுகோனேயுடன் தயாரிப்பாளர் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தீபிகா படுகோனே தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் வேறு வழியில்லாமல் அவரை அப்படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால் படத்தின் கதையில் மாற்றம் செய்ததால்தான் தீபிகா படுகோனே தானாக அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக தீபிகா படுகோனே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் கதை தீபிகா படுகோனேயைச் சுற்றி வரும் வகையில் இருந்ததாகவும், ஆனால் சமீபத்தில் தயாரிப்பாளர் தரப்பில் தீபிகா படுகோனேயைத் தொடர்பு கொண்டு கதையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

'என்னால் 12 மணிநேர ஷிஃப்ட்டில் பணிபுரிய முடியும், ஆனால்...'- தீபிகா படுகோன் குறித்து வித்யா பாலன்

புதிய மாற்றத்தின்படி தீபிகா படுகோனே கௌரவ தோற்றத்தில் வந்து செல்வது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்ததால் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக தீபிகா படுகோனே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட் படத்தில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டார். அப்படத்தில் படப்பிப்பின் போது 8 மணி நேரம்தான் தினமும் படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்று தீபிகா படுகோனே நிபந்தனை விதித்ததால் அதிலிருந்து நீக்கப்பட்டார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.