தமிழக வெற்றிக் கழகம்' கட்சித் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் இன்று மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொள்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை வழியாக நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டார்.
விஜய், திருச்சியில் இருந்து ஈசிஆர் சாலை வழியாக வாஞ்சூர் வழியாக நாகை செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த திட்டம் மாற்றப்பட்டு, தற்போது அவர் தஞ்சாவூர் புறவழி சாலை வழியாக நாகை செல்கிறார். வாஞ்சூரில் விஜய்யை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் காத்திருந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் அவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
கடந்த வாரம் திருச்சியில் விஜய் வந்தபோது, விமான நிலைய பகுதியில் தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தவிர்ப்பதற்காக, இன்று திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய்யை வரவேற்க வந்த தொண்டர்கள் விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணா சிலை அருகிலும், திருவாரூர் தெற்கு வீதியிலும் இன்று மதியம் மற்றும் மாலை நேரங்களில் விஜய் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதன் காரணமாக, நாகை மற்றும் திருவாரூர் பகுதிகளில் இன்று காலை முதலே விஜய்யின் தொண்டர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
Edited by Mahendran