தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மையத்தில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக் கால ஈட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குலசேகரப்பேரி கண்மாய் அருகிலுள்ள 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடுகாடு பகுதியில் 2024ஆம் ஆண்டுமுதல் முதல்வரின் உத்தரவின் பேரில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இயக்குநர் வசந்தகுமார், துணை இயக்குநர் காளீஸ்வரன் தலைமையில் நிபுணர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.
துணை இயக்குநர் காளீஸ்வரன் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட இடுகாடுகளில் மிகப்பெரிய கற்சட்டம் கொண்ட அரண்கள் இங்கு உள்ளன. 13.50 மீட்டர் நீளம், 10.50 மீட்டர் அகலம் கொண்ட 35 பெரிய கற்பலகைகளால் சூழப்பட்ட அரணுக்குள் ஈமத் தாழிகள் இருந்தன. அவற்றின் மேல் 1.50 மீட்டர் உயரத்திற்கு கூழாங்கற்கள் அடுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 38 குழிகள் தோண்டப்பட்டதில் 75 சிவப்பு, ஒரு கருப்பு-சிவப்பு என மொத்தம் 76 ஈமத் தாழிகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் கழுத்துப் பகுதியில் கூம்பு, வட்டம் மற்றும் கூட்டல் போன்ற குறியீடுகள் பொறிக்கப்பட்டிருந்தன” என்றார்.
மேலும் 2.5 மீட்டர் நீளமுள்ள இரும்பு ஈட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், இதுவரை அகழாய்வில் கிடைத்தவற்றில் இது மிகப்பெரியது என்றும் அவர் கூறினார்.
கூடுதலாக 3 தங்க வளையங்கள், பல வடிவ மண் பாண்டங்கள், பல்வேறு குறியீடுகளுடன் கூடிய ஈமத் தாழிகள் மற்றும் பல இரும்புப் பொருள்கள் என 250க்கும் மேற்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.