வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில ஏஜென்ட்கள், ஈரானில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்றும், அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் என்றும் ஆசை வார்த்தைகளால் இந்தியர்களை கவர்ந்து வருகின்றனர்.
ஆனால், அவர்களை நம்பி ஈரானுக்குச் செல்லும் பலர் அங்குள்ள குற்றக் கும்பல்களின் கைகளில் சிக்கி கடத்தப்படுகின்றனர். பின்னர், பணயக்கைதிகளாக வைக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து பெரும் தொகை பணம் கோரி மிரட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக இத்தகைய வழக்குகள் அதிகரித்து வருவதால், போலியான உறுதிமொழிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகம் இந்தியர்களை வலியுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் வேலை பெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் மூலமே செல்ல வேண்டும் எனவும், சந்தேகமான வேலை வாய்ப்பு விளம்பரங்களை உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.