“ஏசி காரில் வியர்க்கும் அளவிற்கு அமித்ஷா வீட்டில் என்ன நடந்தது? பேக்கரி டீலிங்கா?”- பழனிசாமியை வறுத்தெடுத்த உதயநிதி
Top Tamil News September 24, 2025 09:48 AM

நமது முதலமைச்சர்தான் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ‘ரோல் மாடலாக’ இருக்கிறார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், 2026 தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், அனைத்துக் கழக மாவட்டங்களுக்கும் பயணம் செய்து, நிர்வாகிகளைச் சந்தித்து வருகின்றார். இதில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இன்று விருதுநகர் தெற்கு கழக மாவட்டம் சாத்தூர் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசி கழக நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, ஆலோசனைகளை வழங்கினார். 

கூட்டத்தில் துணை முதலமைச்சர் பேசியதாவது, ”மாநில உரிமைகளைப் பாதுகாக்க, இந்தியாவிலேயே பாசிச பாஜகவை எதிர்த்துப் போராடக்கூடிய ஒரே தலைவர் நமது முதலமைச்சர் மட்டும் தான். நமது முதல்வர்தான் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ‘ரோல் மாடலாக’ இருக்கிறார். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சியை அடைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதனால் தான் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்து வருகிறது. எவ்வளவு பிரச்சனைகளைக் கொடுத்தாலும், தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுகிறதே என்று சங்கிகளும் அவர்களது அடிபொடிகளும் எரிச்சலடைகிறார்கள். அதனால் தான் நாள்தோறும் புதுப்புது பிரச்சனைகளைக் கொண்டுவருகிறார்கள். எதையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு இருக்கிறது. அதிமுகவில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அணி உருவாகிறது. இப்போது செங்கோட்டையன் அணி உருவாகியிருக்கிறது. அவர் ஹரிதுவார் போகிறேன் என்று சொல்லிவிட்டு அமித்ஷாவைச் சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் நான்கு கார்கள் மாறி அமித்ஷாவைச் சந்திக்கிறார். வெளியில் வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வருகிறார். பத்திரிகையாளர்கள் படம் பிடித்துப் போட்டதும், முகத்தைத் துடைத்தேன் என்கிறார். ஏசி காரிலேயே முகம் வியர்க்கிறது என்றால், அப்படி வியர்க்கும் அளவுக்கு என்ன நடந்தது? வடிவேலு படக் காமெடியில் வருகிற பேக்கரி டீலிங் நடந்திருக்கிறது. அமித்ஷா தான் தங்களது தலைவர் என்று அதிமுக தலைவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். நமது கூட்டணி உடைந்துவிடாதா என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள், நமது கூட்டணி கொள்கைக் கூட்டணி, அனைத்துத் தலைவர்களுடனும் அரவணைத்துச் செல்லக்கூடிய தலைவர் நமது தலைவர். அதனால்தான் நமது கூட்டணி இத்தனை ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்து வெற்றிகளைப் பெற்று வருகிறது. வருகின்ற தேர்தலிலும், யாரை வேட்பாளாராக நிறுத்தினாலும் அவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று பேசினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.