4 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இடஒதுக்கீட்டின் கீழ் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-“விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடதமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
மேலும், மாநிலத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2024-25ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையில், விளையாட்டு வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீரர் / வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதனடிப்படையில்,அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பள்ளி விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள்,
தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள், பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு (மாற்றுத் திறனாளி வீரர்கள் உட்பட) அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
அதன்படி, முதற்கட்டமாக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் 23.12.2024 அன்று வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைய தினம், என 4 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.