தவெக தலைவர் விஜய்யின் ‘சனிக்கிழமை பிரசாரம்’, தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. வார இறுதி நாட்களில் அவர் மேற்கொண்டு வரும் பொதுக்கூட்டங்கள், மக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு சவால்களை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, விஜய் தனது பேச்சில் அ.தி.மு.க. குறித்து நேரடியாக விமர்சிக்காதபோதிலும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் விஜய்யை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு பின்னால் உள்ள முக்கிய அரசியல் காரணங்கள் என்ன என்பது குறித்த ஒரு பார்வை.
விஜய் தனது பேச்சில் உள்ளூர் பிரச்சினைகளை மட்டும் மையப்படுத்தி பேசுகிறார். அத்துடன், ஆளும் கட்சியான தி.மு.க. மீது தனது விமர்சனங்களை மிகக்கூர்மையாக முன்வைக்கிறார். தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் வாக்காளர்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுப்பதே அவரது முக்கிய நோக்கமாக தெரிகிறது. இந்த உத்தி அ.தி.மு.க.வுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, காலம் காலமாக திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை அறுவடை செய்து வருகிறது. ஆனால் தற்போது அக்கட்சி பலவீனமான நிலையில் உள்ளது. அதன் கூட்டணியும் உறுதியற்றதாகவே காட்சியளிக்கிறது. தினகரன், ஓ.பி.எஸ்., சசிகலா என முன்னாள் தலைவர்கள் யாரும் தற்போது அ.தி.மு.க.வுடன் இல்லை. செங்கோட்டையனும் கிட்டத்தட்ட ஒதுங்கிவிட்டார். தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. போன்ற கட்சிகள் கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்ற தெளிவான நிலைப்பாடும் இல்லை. இந்த சூழலில், தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை விஜய் கவர தொடங்கினால், அது அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் என அ.தி.மு.க. தலைமை அஞ்சுகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசார கூட்டங்களுக்கு மக்களை சேர்க்க பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. ஆனால், விஜய்யின் கூட்டங்களுக்கு மக்கள் தன்னெழுச்சியாகவும், இலவசமாகவும் வருகை தருகிறார்கள். வெறும் இரண்டு மாவட்டங்களின் பிரசார பயணத்திலேயே, எடப்பாடி பழனிசாமியின் 140 இடங்களின் பிரசார கூட்டங்களுக்கு இணையான கூட்டத்தை விஜய் சேர்த்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுதான் அதிமுகவுக்கு கவலையை அளிக்கிறது. திமுகவுக்கு மாற்று அதிமுக தான் என தமிழக அரசியலில் இதுவரை இருந்த நிலையில், அது தவெகவாக மாறிவிடுமோ என்ற அச்சம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும், விஜய்யின் இந்த மக்கள் கூட்டம் ஓட்டுகளாக மாறாது என்று தொடர்ந்து கூறி வருகின்றன. இது அவர்களின் பதற்றத்தையே வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது.
அரசியல் விமர்சகர்கள் சிலர், விஜய்யின் அரசியல் வருகை ஏற்கெனவே ஒரு திராவிட கட்சியை பலவீனப்படுத்திவிட்டதாகவும், வரும் தேர்தலில் மற்றொரு திராவிட கட்சியையும் அவர் வீழ்த்துவார் என்றும் அதிமுக, திமுக குறித்து கூறுகின்றனர். விஜய்யின் பிரசார உத்திகள், அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Author: Bala Siva