கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ததாக வெளியிடப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் நிகழ்வுகளுக்கு முறையான அனுமதி பெறாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் தென்னிலை பகுதியில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். சமீபத்தில், தவெகவைச் சேர்ந்த சில இளைஞர்கள், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய விரும்புவதாக தலைமை ஆசிரியர் சுஜாதா சியாமளாவிடம் அனுமதி கோரினர்.
அவரது ஒப்புதலுடன், பொக்லின் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. இதனை வீடியோவாக பதிவு செய்த இளைஞர்கள், தவெக சார்பில் பள்ளி சுத்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆசிரியர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வமணி விசாரணை நடத்தியதில், முறையான அனுமதி பெறப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால், தலைமை ஆசிரியர் சுஜாதா குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.