கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையில் நீதி கிடைக்கும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இதனிடையே கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் துயரச் சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தில் தி.மு.க., அரசு காட்டிய பதற்றமும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வைத்து விளக்கம் கொடுத்தது உள்ளிட்ட தேவையற்ற நடவடிக்கைகளும் சந்தேகத்தை அதிகப்படுத்தின. சி.பி.ஐ. விசாரணையில் முழு உண்மைகளும் வெளிவரும். உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.